2025 மே 05, திங்கட்கிழமை

’மாவீரர் தினத் தடைகள் தகர்த்தெறியப்படும்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 22 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாவீரர் தினத்தை நினைவு கூர்வதற்கு வடக்கு, கிழக்கில் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களுக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை, பொதுமக்கள் ஏதோவொரு வகையில் மேற்கொள்ளுவர்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “2019 நவம்பர் மாதம் 16ஆம் திகதி புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தற்போதைய ஜனாதிபதி, அவ்வாண்டு மாவீரர்களினுடைய , மாவீரர்களை அடக்கம் செய்த இடங்களுக்கும் உறவினர்கள் சென்று அஞ்சலி செலுத்த பெரியளவில் தடை விதிக்கவில்லை. காரணம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருந்த சூழ்நிலையில், தமிழ் மக்களினுடைய வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக 2019ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகளில் பெரியளவில் தடை ஏற்படுத்தவில்லை.

“ஆனால், தற்போது இந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளுக்கு முழுமையான நீதிமன்ற தடை உத்தரவு விடுக்கப்படுகின்றது. 

“இந்த அரசாங்கம் தமிழ் மக்களை ஓர்  அச்ச உணர்வில்  சுயமாக செயற்பட முடியாதவாறு கொண்டுவருவதற்குத்தான் மாவீரர்களின் அஞ்சலி நிகழ்வுகளுக்கும், பொதுமக்களுடைய பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைப்பதும் நடைபெறுகின்றது. 

“குறிப்பாக, நவம்பர் 21 ஆம் திகதியில் இருந்து  மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக 22ஆம் திகதியில் இருந்து  பொதுமக்களுடைய பாதுகாப்பு முழுமையாக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

“இராணுவத்தினுடைய ஆட்சி இலங்கையில் படிப்படியாக நாளுக்கு நாள் வைரஸ் போல் பரப்பி இராணுவ ஆட்சியைக் கொண்டு வருவதற்கான புதிய சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இராணுவ அதிகாரிகள் செயலாளர்களாக, பொறுப்பாளர்களாக இருக்கின்றார்கள். பொதுமக்களுடைய பாதுகாப்பு இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

“இலங்கையில் தற்போது என்ன பயங்கரவாதம் இருக்கின்றது என நான் கேட்க விரும்புகின்றேன். 2009ஆம் ஆண்டு பயங்கரவாதத்தை அழித்து விட்டோம் என்று மார்பு தட்டி, சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற நீங்கள் ஏன் அவசர அவசரமாக இவ்வாறான விடயங்களை மேற்கொள்ள வேண்டும்?

“எங்களுடைய மக்கள் சுதந்திரமாக வாழ முடியாத சூழ்நிலையில், இராணுவத்தின்  பிரசன்னத்தின்  மூலம் மக்களை முழுமையாக கட்டுப்படுத்த ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முன்னாள் இராணுவ தளபதியும் திட்டமிட்டுள்ளனர் என்பது வெளிப்படையான உண்மை. 

“ஆனால், எங்களுடைய உறவுகளின் இருப்புக்காகவும் மக்களுக்காகவும் போராடி வீரச்சாவடைந்த மாவீரர்கள், யுத்தத்தில் உயிர் நீத்த பொதுமக்கள் அனைவருக்கும் என்ன தடை விதித்தாலும் ஏதோ ஒரு வகையில் மக்கள்  அஞ்சலி செலுத்துவார்கள். அவர்களால் மனதால் செலுத்தலாம் அல்லது அவர்களுடைய வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X