2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘முதல் நாள் கிடைக்கும் அழைப்பால் மறுநாள் கலந்துகொள்வதில் சிக்கல்’

Editorial   / 2019 ஜூன் 16 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முதல்நாள் கிடைக்கின்ற அழைப்பால், மறுநாள் நடைபெறுகின்ற கூட்டங்களில் கலந்துகொள்ள முடியாதுள்ளதாக, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். 

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டுகொள்வதில்லையென, முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவரால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், முல்லைத்தீவில் அண்மையில் நடைபெற்ற கடற்றொழிலாளர்கள் சம்பந்தமான கூட்டத்துக்கான அழைப்பு, முதல் நாளே கிடைத்ததாகவும் இதனால், மறுநாள் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாதச் சந்தர்ப்பம் தனக்கு ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.  

முல்லைத்தீவில் கடந்த ஐந்தாண்டுகளாக, இந்திய றோலர் படகுகளின் அத்துமீறிய தொழில்களால், முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்ததாகத் தெரிவித்த அவர், அது குறித்து, கடற்றொழில் அமைச்சருடன் பேசியதுடன், நாடாளுமன்றத்திலும் குரல்கொடுத்ததாகவும் கூறினார். 

இந்திய றோலர்களின் பிரவேசம் தற்போது குறைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதேநேரத்தில், முல்லைத்தீவில் சட்டவிரோதத் தொழில்கள் இடம்பெறுகின்றதென்பது மறுக்கக் கூடியதல்லவெனவும் கூறினார். 

கடற்றொழிலாளர்களைப் பாதிக்கின்ற எந்தத் தொழில் முயற்சிகளும் இடம்பெறக்கூடாதெனத் தெரிவித்த அவர், இதனைக் கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்களம் கண்காணிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.  

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டக் கடற்றொழிலாளர்களைப் பாதிக்கின்ற விடயங்களுக்கு எதிராக, தான் தொடர்ந்துக் குரல் கொடுப்பதாகவும், அவர் மேலும் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .