2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

முறையிட வந்த மக்களை அவமரியாதையாக நடத்திய பொறியியலாளர்

Niroshini   / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில்  சில தினங்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இன்று (04) அதிகாலை கடும் மழை பெய்துள்ளது.

சாந்திபுரம், சௌத்பார், ஜிம்றோன் நகர் உள்ளிட்ட சில கிராமங்களில் உள்ள தாழ்வான பகுதிகளில், மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் பெய்த கடும் மழை காரணமாக, ஆங்காங்கே வெள்ள நீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சாந்திபுரம் பகுதி மக்கள், இன்று (04) காலை, நகர சபை தவிசாளருக்கும் செயலாளருக்கும்  தெரியப்படுத்தியதுடன், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் சகிதம், வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலகத்துக்கும் முறையிட சென்றுள்ளனர்.

இதன்போது, அங்கு  பணிபுரியும் பொறியலாளர் பாதிக்கப்பட்ட மக்களை மரியாதை குறைவாக நடத்தியதுடன், அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணித்துள்ளார்.

அத்துடன், தற்போது எந்த வீதி செயற்பாடுகளும் செய்ய முடியாது எனவும் இதற்கு மேல் இங்கு நின்றால் பொலிஸில் பிடித்து கொடுத்து விடுவேன் என்றும், அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள், மன்னார் நகர பிரதேச செயலாளரிடம் குறித்த விடயம் தொடர்பாக நேரடியாக முறையிட்டதை தொடர்ந்து, நீர் வழிந்தோடக் கூடிய தற்காலிக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவதாக, மன்னார் நகர பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மன்னார் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் மீது மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சாந்திபுரம் பகுதியில் உள்ள வீதிகள் அண்மையில் புனரமைக்கப்பட்ட போதும், உரிய   வடிகால் அமைப்பு கல்வெட்டு மற்றும் நீர் வழிந்தோட கூடிய  ஏற்பாடுகள் மேற்கொள்ளாது புனரமைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மழை நீர் வலிந்து கடலுடன் கலக்க முடியாத நிலையில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .