2025 ஜூலை 26, சனிக்கிழமை

வவுனியா வடக்கில் அதிபர்களுக்குச் சம்பளம் இல்லை முறைகேடு இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு

Yuganthini   / 2017 ஜூலை 27 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
வவுனியா வடக்கு பாடசாலைகளின் அதிபர்களுக்கு, இம்மாதச் சம்பளம் வழங்கப்படாமை தொடர்பில், வடமாகாணக் கல்வியமைச்சு விசாரணைகளை நடாத்த வேண்டும் என, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவர் எஸ்.நேசராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பின்தங்கிய பாடசாலைகளுக்கு வருகை நேரக்கணிப்பு இயந்திரம் பொருத்தவில்லை என்பதற்காக, வவுனியா வடக்கு வலய கல்விப் பணிப்பாளரால், அதிபர்களுக்கு இம்மாதச் சம்பளம், இன்றுவரை வழங்கப்படவில்லை.

“வடமாகாண கல்வியமைச்சு, சரியான நிதி மூலங்களை பாடசாலைகளுக்கு வழங்காமலும், பின்தங்கிய பிரதேசங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் மேலதிக சேவைநேரங்களைக் கவனத்தில் எடுக்காததுமான நிலைமை, வடமாகாணக் கல்வியைப் பாதிப்பது மட்டுமன்றி, வவுனியா வடக்கு வலயக்கல்விப் பணிப்பாளரின் முறைகேட்டுக்கும் அதிகார துஸ்பிரயோகத்துக்கும் இன்று வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

“போதிய நிதிவசதியின்றி இயக்கப்படும் பாடசாலைகளில், மாணவர்களுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய தர உள்ளீட்டுப் பணத்தில், இயந்திரக் கொள்வனவு செய்யவேண்டும் என வற்புறுத்துவது, முறையற்ற நிதிப்பயன்பாடாகும். இத்தகைய செயற்பாடுகளை, இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

“அதேவேளை குறித்த நிறுவனம் ஒன்றுடன், வலயக் கல்விப் பணிப்பாளரே ஒப்பந்தம் செய்து, இயந்திரங்களை கொள்வனவு செய்துள்ளார் எனவும், இவற்றை விற்றுத் தீர்க்கும் முகமாகவே, அதிபர்களின் சம்பளங்களை நிறுத்தி அடாவடித்தனம் செய்வதாகவும் அறியமுடிகின்றது. இச்செயற்பாட்டை, இலங்கை ஆசிரியர் சங்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

“இவ்விடயம் தொடர்பாக, வடமாகாணக் கல்வியமைச்சு விரைவான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X