Niroshini / 2021 செப்டெம்பர் 02 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால், மூன்றாவது விடுதியும் திறக்கப்பட்டுள்ளதாக, வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் தெரிவித்தார்.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோதும், மக்கள் தமது நடமாட்டங்களை குறைத்துக் கொள்வதுடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் நிலைமை கைமீறிப்போகும் நிலை ஏற்படலாம் எனவும், அவர் எச்சரித்தார்.
வவுனியா வைத்தியசாலையில், தற்போதைய கொரோனா தொற்றாளர் நிலைமைவரம் தொடர்பில் வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், வவுனியா வைத்தியசாலையில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றாளர்களைப் பராமரிப்பதற்காக 100 படுக்கைகளைக் கொண்ட 3 விடுதிகளும், 15 படுக்கைகளைக் கொண்ட கர்ப்பிணி தாய்மாருக்கான விசேட விடுதியும், 6 படுக்கைகளைக் கொண்ட அதிதீவிர சிகிச்சை பிரிவும், 2 படுக்கைகளைக் கொண்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவுமாக 120க்கும் அதிகமான படுக்கைகளைக் கொண்ட நோயாளர் பராமரிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.
இந்த வசதி, தமது வைத்தியசாலையின் ஆளணி மற்றும் ஏனைய காரணிகள், வளங்களைப் பொருத்த வரையில் மிக அதிகளவாகும் எனவும், அவர் கூறினார்.
வவுனியா மாவட்டத்தில், ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 50 வரையான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்த அவர், வைத்தியசாலையில் கட்டில்களை அதிகரிப்பதிலோ உயிர்சுவாச கருவிகளை தருவிப்பதிலோ மாத்திரம் மாவட்டத்தின் தொற்று நிலையை கட்டுப்படுத்திவிடாது எனவும் கூறினார்.
வவுனியா வைத்தியசாலையில், மூன்றாவது விடுதியும் தற்போது செயற்படத் தொடங்கியுள்ளமையானது, தினமும் அதிகரித்து வரும் தொற்றாளர்களால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதையே உணர்த்தி நிற்கின்றது.
வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் சில நேற்று முன்தினம் (01) இரவு வெளியாகியுள்ளன.
இதன் போது, வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 239 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
34 minute ago
55 minute ago
1 hours ago