2025 ஜூலை 16, புதன்கிழமை

வாள்வெட்டு குழு அடையாளம் காணப்பட்டது

Editorial   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்   

திருநெல்வேலி - வாழையம்மன் கோவில் பகுதி மற்றும் வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து, சொத்துகளுக்கு சேதம் விளைவித்த வாள்வெட்டு குழு, அடையாளம் காணப்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.   

குறித்த கும்பல், யாழ்ப்பாணம் - நாயண்மார்கட்டுப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.   

இதன்போது 10 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.   

சம்பவம் இடம்பெற்ற தினத்தில், 10 இளைஞர்கள் இரண்டு முச்சக்கரவண்டி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்திருந்ததாக, முறைப்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டது.   

கடந்த 03ஆம் திகதி இரவு வாழையம்மன் கோவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மதிலில் ஏறிப்பாய்ந்து உள்ளே சென்ற வாள்வெட்டு கும்பல், வீட்டு முன் கதவை அடித்துடைத்து சேதப்படுத்தியதுடன், வீட்டு யன்னல் கண்ணாடிகளையும் உடைத்துள்ளது. இதனால், வீட்டு உரிமையாளருக்கு 12,000 ரூபாய் சொத்திழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.   

அதேபோல், வெள்ளைப் பிள்ளையார் கோவில் பகுதியில் உள்ள வீட்டுக்கு, அதேயிரவு சென்ற குறித்த வாள்வெட்டு கும்பல், வீட்டின் மேல்மாடியில் இருந்த யன்னல்களை அடித்துடைத்து சேதம் விளைவித்துள்ளது.   

மேலும், வீட்டுக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் வாளால் கொத்தி சேதம் விளைவித்துள்ளது.   

இச்சம்பவத்தால், 16 ஆயிரம் பெறுமதியான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.   

வீட்டு உரிமையாளர்கள் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், மேற்படி கும்பலைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .