2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விளையாட்டுப் போட்டியை சொந்த மைதானத்தில் நடத்த அனுமதி

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மகா வித்தியாலய விளையாட்டுப்போட்டியை, பெப்ரவரி 11ஆம் திகதி சொந்த மைதானத்தில் நடத்த மாவட்ட செயலகம் அனுமதி வழங்கியுள்ளது.

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் 2,500க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் சொந்தமான விளையாட்டு மைதானம் இல்லாது பெரும் சிரமங்களை பாடசாலை சமூகம் எதிர்கொண்டு வந்தது.

2007ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச செயலகத்தால் குறித்த பாடசாலையின் விளையாட்டு திறன் விருத்திக்காக 4 ஏக்கர் காணி வழங்கப்பட்டிருந்தது. பாடசாலைக்கு மிக அருகில் வழங்கப்பட்ட காணியையும் இணைத்து, சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக முயற்சிகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் தமது விளையாட்டு திறன்களை வெளிப்படுத்தும் வகையில் காணி இல்லாமையால் கழகங்கள் பயன்படுத்தும் மைதானங்களையும் பாடசாலை முற்றத்தையும் பயன்படுத்தி வந்தனர்.

பாடசாலைக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட குறித்த காணியை மீட்டு தருமாறு பாடசாலை அதிபர், பாடசாலை சமூகம் இணைந்து பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் பாடசாலை விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்காக நேற்று மாலை பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பெற்றோர் இணைந்து பாடசாலைக்கு சொந்தமான காணியை துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நாளை வெள்ளிக்கிழமை விளையாட்டுப்போட்டி இடம்பெறவிருந்த நிலையில் தமது பிள்ளைகளின் விளையாட்டு திறன் விருத்திக்காக பாடசாலைக்கு சொந்தமான காணியை இவ்வாறு அபிவிருத்தி செய்து கொண்டிருந்த போது, சர்வதேச விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்துவரும் தரப்பினரால் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.

119 இலக்கத்துக்கு அழைத்து முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், இரவு பொலிஸார் குறித்த பணியை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டதுடன், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், முறைப்பாட்டாளர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் குறித்த காணி விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் தீர்மானத்துக்கமைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், அபிவிருத்தி பணிகளை இடை நிறுத்துமாறும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று வியாழக்கிழமை இரு தரப்பினருடன் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்தனர். குறித்த காணியில் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு மாவட்ட செயலகம் இன்று அனுமதியை வழங்கியிருந்தது. நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறவிருந்த குறித்த விளையாட்டுப்போட்டி, மைதான புனரமைப்புக்காக, பெப்ரவரி 11ஆம் திகதிக்கு பாடசாலை சமூகத்தினரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .