2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

‘வீட்டுத் திட்டங்களில் முறைகேடுகள்’

Editorial   / 2017 ஜூலை 18 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

- சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 42 கிராம அலுவலர் பிரிவுகளிலும் வழங்கப்படுகின்ற வீட்டுத் திட்டங்களில் முறைகேடுகள் இடம்பெறுவதாக, கரைச்சி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தவைர்களான, சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, அங்கஜன் இராமநாதன், சிவஞானம் சிறிதரன் ஆகியோரின் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது. இதன்போதே, பொதுமக்களால் மேற்படி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

“கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட 42 கிராம அலுவலர் பிரிவுகளிலும் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை மீள்குடியேறிவரும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. எனினும் இவ்வீட்டுத்திட்டங்களில் முறைகேடுகள் இடம்பெறுகின்றன. அதிகாரிகள் வீட்டுத்திட்டங்களை வழங்குவதில் பாரபட்சமாக நடந்து கொள்கின்றனர்.

அவ்வகையில், வட்டக்கச்சிப் பகுதியில், கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரைச்சிப் பகுதியில், வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவருக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே, வேறு பகுதியைச் சேர்ந்த ஒருவர், உருத்திரபுரம் பகுதியில் காணியைக் கொள்வனவு செய்து, அக்காணிக்கு வீட்டுத் திட்டத்தைப் பெற்றுள்ளார். மேலும், இவ்வாறு வீட்டுத் திட்டத்தை பெற்று வீட்டை அமைத்த ஒருவர், தான் அவ்வீட்டில் குடியிருக்காது வேறு ஒருவரை அவ்வீட்டில் தங்க வைத்துள்ளார். அவ்வாறு தங்கியிருந்த ஒருவரால், அப்பகுதி பாடசாலைச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். இவ்வாறு தேவையற்றவர்களுக்கு வீட்டுத் திட்டதை வழங்குவதால் சட்டவிரோத செயற்பாடுகளும் அவ்வீடுகளில் இடம்பெறுகின்றன. ஆனால், அப்பகுதியில் வீட்டுத் திட்டம் வழங்கப்படாத 19 குடும்பங்கள், பாதுகாப்பற்ற ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதார அபிவிருத்தி அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், கிராம சேவையாளர் போன்ற அதிகாரிகள் இருப்பினும் இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை வருத்தம் அளிக்கின்றது.

இவ்வாறு கரைச்சி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம சேவையாளர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட உரிய மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படாது பாரபட்சமாக வழங்கப்படுகின்றமை தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பொதுமக்கள் சுட்டிக்காட்டினர்.

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .