2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வீட்டுத்திட்ட பணிகளைப் பார்வையிட்ட சிறீதரன் எம்.பி.

Editorial   / 2019 பெப்ரவரி 13 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பளை - தம்பகாமம் கிராமத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிரந்தர வீடுகளின்றி வாழும் மக்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்டங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின், கோரிக்கைக்கமைய வீடமைப்பு உட்கட்டுமான அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவால், வீடமைப்புத் திட்டத்தினூடாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் அமைக்கப்படுகின்றது.

இதன் கீழ் அமைக்கப்படும் தம்பகாமம் பகுதி மாதிரிக் கிராம வீட்டுத்திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வீட்டுத் திட்டப் பயனாளிகளுடனும் கலந்துரையாடி கிhரமத்தில் உள்ள ஏனைய வளப் பற்றாக்குறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

கிளிநொச்சி மாவட்டத்தில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழுகின்ற பல கிராமங்களில், மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாத நிலையில், நீண்ட காலமாகப் பலர் தற்காலிக கொட்டகைளில் அவலப்பட்டு வருகின்றார்கள். மக்களது அவலங்களை நாடாளுமன்றத்திலும் ஏனைய உரிய இடங்களிலும் சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பல தடவைகள் வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் அராஜக ஆட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடரந்து பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சுட்டிக்காட்டிய விடயங்களைக் கருத்திற்கொண்ட தற்போதைய அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும் பணிகளை ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.

அவ்வகையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள. இதன் ஓர் அங்கமாக பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள தம்பகாமம் பகுதியில் கிராமம் ஒன்றில் 20 வீடுகளும் கிராமம் இரண்டில் 12 வீடுகளும் கொண்ட மாதிரிக் கிராம வீடமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதிக்கு கடந்த 10ஆம் திகதியன்று, நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் சுபாஸ்கரன், உதவிப் பொறியியலாளர் சிவநேசன், தொழிநுட்ப உத்தியோகத்தர் மதிதீபன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்கள் வீடமைப்புப் பணிகளைப் பார்வையிட்டு மக்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது, தம்பகாமம் பகுதியின் வீதி புனரமைப்பு மக்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் தமது கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .