2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

வீட்டுத்திட்டம் தெரிவில் புறக்கணிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு - தேறாங்கண்டல் பகுதியில், அரசாங்கத்தால் வழங்கப்படும் வீட்டுத்திட்டமத்துக்கான மக்கள் தெரிவினது, மக்கள் நிர்வாகத்தையோ மக்களையோ கேட்காது அரச அதிகாரிகள் தன்னிச்சியாக தெரிவு செய்துள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு இது தொடர்பில் தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் கவலை தெரிவித்துள்ளனர்.

தேறாங்கண்டல் பகுதியில், பலர் போரால் பாதிக்கப்பட்டு இன்றும் தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்து வருகின்றார்கள். பல புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கும் வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை. ஏற்கெனவே இந்தப் பகுதியில் மக்களுக்காக பிரதேச செயலகத்தின் சிபாரிசுடன் வழங்கப்பட்ட பல வீடுகள் பாவனையற்று இருப்பதாகவும், பிரதேச மக்கள் முறையிட்டுள்ளார்கள்.

இது தொடர்பில், பிரதேச மக்கள் கையெழுத்து இட்ட அறிக்கை  ஒன்றை, நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர், வடமாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் எழுதிய கடிதத்தில், “தேறாங்கண்டல் கிராமத்துக்கு வீட்டுத் திட்டம் வந்தமையையிட்டு, சந்தோசப்படுகின்றோம். கிராமத்தில் உள்ள நிர்வாகத்தையோ, மக்களையோ வைத்து கூட்டம் நடத்தப்படாமலேயே வீட்டுத்திட்டத்தை தெரிவு செய்துள்ளார்கள்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டுத்திட்டம் வழங்கும் நடைமுறைப்படி நடைபெறவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து மக்கள் முன்னிலையில் கூட்டத்தினை நடத்தி தீர்மானிக்க ஆவண செய்யுமாறும், அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .