2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதி புனரமைப்பு: முன்னுக்குப் பின் முரணான தகவல்

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்     

கிளிநொச்சி - ஆனந்தபுரம் கிழக்கு மத்திய கல்லூரிக்கு பின் வீதி  புனரமைப்பு  தொடர்பில் கரைச்சி பிரதேச சபையிடமும் கிளிநொச்சி உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் விபரம் கோரிய போது, இரண்டு நிறுவனங்களும்  இருவேறு தகவல்களை வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட ஆனந்தபுரம் கிழக்கு மத்திய கல்லூரி பின் வீதியானது ஒப்பந்தகாரர் ஒருவரால் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், தீடிரென வீதி புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

அதாவது செலவு திட்ட மதிப்பீடுகளோ  புனரமைப்புக்கான உடன்படிக்கையோ கைச்சாத்திடப்படாது, தவிசாளரின் வாய்மொழி மூல அறிவித்தலுக்கு அமைய எவ்வித சட்டத்திட்டங்களுக்கும் உட்படாது, வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளரால் கணக்காய்வு திணைக்களத்திற்கும், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்துககும் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே, இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு ஊடாக வினவிய போது, குறித்த வீதியானது  தங்களால் புனரமைக்கப்படவில்லை எனவும் அதற்கான மதிப்பீடுகளோ, ஒப்பந்தமோ கைச்சாத்திடப்படவில்லை என பதிலளிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, இவ்வீதி புனரமைப்பு தொடர்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வினவிய போது, குறித்த வீதி புனரமைப்பு யாரால் மேற்காள்ளப்பட்டது என்று ஆராயுமாறு கரைச்சி பிரதேச சபை செயலாளரினால் தொழிநுட்ப உத்தியோகத்தரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது எனவும், குறித்த வீதியானது யாரால், எந்த நிதியில், எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது போன்ற ஆவணங்களுடன் தொழிநுட்ப உத்தியோகத்தரின் அறிக்கையையும்  பெற்று அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது என பதிலளித்துள்ளனர். 

ஆனால் குறித்த வீதி புனரமைப்புப் பணிகள் எவ்வித சட்ட நடைமுறைகளுக்கும் உட்படாது இதுவரைக்கும் 10 இலட்சம் ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு, தொடர் அபிவிருத்திக்குரிய கண்டக் கல் என்பனவும் இறக்கப்பட்டும் காணப்படுகிறது. எனவே குறித்த வீதி புனரமைப்பு நடவடிக்கையில் ஊழல் மற்றும் முறைகேடுகள் இருப்பதனால் உரிய திணைக்களங்கள் விசாரணைகளை மேற்கொண்டு சட்டநடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என, கரைச்சி பிரதேச சபையின் எதிர்தரப்பு உறுப்பினர்களும் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .