2025 ஜூலை 16, புதன்கிழமை

‘வெடிபொருட்கள் சவாலாக உள்ளன’

Editorial   / 2017 செப்டெம்பர் 04 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – முகமாலை பகுதியில், யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட நிலக்கண்ணி வெடிகள் பாரிய சவாலாக காணப்படுவதாக, மாவட்ட செயலாளர்  சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கிளிநொச்சி மாவட்டத்தின் அதிக யுத்தம் இடம்பெற்ற பகுதியாகவும், யுத்த சூனிய பிரதேசமாகவும் காணப்பட்ட முகமாலைப் பகுதியில் தொடர்ந்தும் வெடிபொருள் அச்சம் காணப்படுகின்றது.

“இவ்வாறு, இப்பகுதியில் வெடிபொருட்களில் சிக்கி பெறுமதி மிக்க மனித உயிர்கள் கொல்லப்படுவதுடன், பலர் தமது உடல் அவயங்களையும் இழக்க நேரிடுகின்றது.

“வெடிபொருட்கள் பற்றிய விழிப்புணர்வுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், இவ்வாறான பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

“இந்நிலையில், முகமாலை பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெடிபொருளை அகற்றும் பணிகளை துரிதமாக செய்ய முடியாத நிலையிலும், பணியாளர்கள் இயன்றளவு முன்னெடுத்து வருகின்றனர்.

“எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில், அதாவது கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளில், சிலர் மீண்டும் கண்ணிவெடிகளை புதைத்து மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

“இது தொடர்பில், சரியான ஒரு முடிவை அல்லது தீர்வை எடுக்க வேண்டியுள்ளது” என்றார்.

இது தொடர்பில், கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்கொண்டு வரும் கண்ணிவெடி அகற்றும் நிறுவனப்பிரதிநிதிகள் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்தப் பகுதிகளில் வெடிபொருட்கள் பெரும் சவால்களாக காணப்படுகின்றன. இப்பகுதிகளில் இன்னமும் வெடிபொருட்கள் அகற்றப்படாத மிகவும் ஆபத்தான பகுதிகளில் கைவிடப்பட்ட காவலரண்களில் உள்ள மரக்குற்றிகள், இரும்புகள் என்பவற்றை பலர் எடுத்து வருகின்றனர்.

“இதேவேளை, கண்ணவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கும் பகுதிகளில் வெடிபொருள் ஆபத்துகளுக்கு இடும் பதாதைகள் குறியீடுகள் என்பவற்றையும் சேதப்படுத்தியும் அவற்றை எடுத்தும் செல்கின்றனர்.

“இதனால் மறுநாள் பணிகளை முன்னெடுப்பதற்கு முன்னர் அதனை சீர்செய்வதற்கு பணியாளர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

“இதேவேளை, வெடிபொருள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகள்  தவிர்ந்த ஏனைய ஆபத்தான பகுதிகளுக்கு பொலிஸாரின் பாதுகாப்பு அவசியம்” எனத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .