2025 மே 02, வெள்ளிக்கிழமை

குற்றச்சாட்டுக்களை அடுத்து பதவி விலகினார் யாகூவின் நிறைவேற்று அதிகாரி

A.P.Mathan   / 2012 மே 14 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாகூ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்கொட் தொம்ப்ஸன் அப்பதவியிலிருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வரையில் விலகியுள்ளார். அவர் மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்தே அவர் பதவி விலகியுள்ளார்.

ஸ்கொட் தொம்ப்ஸனின் இடத்திற்கு இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாக ரொஸ் லெவின்ஸொன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது சுயவிபரத்தில் தான் 1978ஆம் ஆண்டு கணக்கியல் மற்றும் கணினி விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்திருந்ததாக தவறான தகவலை வழங்கியமைக்காகவே அவர் மீது அழுத்தங்கள் எழுந்திருந்தன. அவரது கல்லூரியான ஸ்ரோன்ஹில் கல்லூரி, அவர் தங்கள் கல்லூரியில் பட்டமொன்றைப் பெற்றதை உறுதிப்படுத்தியிருந்த போதிலும், அவர் கணக்கியலுக்கான பட்டப்படிப்பை மாத்திரமே கொண்டிருந்ததாக உறுதிப்படுத்தியிருந்தது. அத்தோடு 1983ஆம் ஆண்டு வரை அக்கல்லூரி கணினி விஞ்ஞானத்திற்கான பட்டப்படிப்பு கல்வியை வழங்கியிருக்கவில்லை எனவும் உறுதிப்படுத்தியது.

ஸ்கொட் தொம்ப்ஸனின் சுயவிபரத்தில் காணப்பட்ட தவறை யாகூ நிறுவனத்தின் முதலீட்டாளர்களில் ஒருவரே கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருந்தார். தனது நிறுவனமான "தேர்ட் பொயின்ட் எல்.எல்.சி" ஊடாக யாகூ நிறுவனத்தின் 5.8 சதவீதப் பங்குகளைக் கொண்டுள்ள நியூயோர்க்கைச் சேர்ந்தவரான டானியல் லோப் என்பவரே இந்தத் தவறைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும் யாகூ நிறுவனம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் ஸ்கொட் தொம்ப்ஸனின் பதவி விலகலுக்கான காரணங்கள் குறித்து விளக்கப்பட்டிருக்கவில்லை.

இதற்கு முன்னர் இணைய கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் "பே பால்" நிறுவனத்தின் தலைவராகச் செயற்பட்டிருந்த ஸ்கொட் தொம்ப்ஸன், இவ்வாண்டு ஜனவரி 4ஆம் திகதியே யாகூ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகப் பதவியேற்றிருந்தார்.

உலகின் பிரபல தேடல் இயந்திரங்களுள் ஒன்றான யாகூ நிறுவனம், தேடல் வசதிகள் தவிர, புகைப்படங்களை பகிரும் வசதிகள், செய்திகள், விளம்பர வசதிகள், வினாக்களுக்கான விடைகள், குழும வசதிகள், விளையாட்டுக்கள், மின்னஞ்சல் வசதி, அரட்டை வசதி, வரைபட வசதிகள் உட்பல ஏராளமான வசதிகளை வழங்கி வருகிறது. (க்ரிஷ்)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .