2024 ஜூன் 17, திங்கட்கிழமை

நாடு திரும்பினார் சல்மான் பட்

A.P.Mathan   / 2012 ஜூன் 23 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்பொட் ஃபிக்சிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு இங்கிலாந்தில் சிறை வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சல்மான் பட் பாகிஸ்தானுக்குத் திரும்பியுள்ளார். அவரது தண்டனைக்காலம் நிறைவடைய முன்னரே அவர் விடுவிக்கப்பட்டதை அடுத்தே அவர் நாடு திரும்பியுள்ளார்.

2010ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லோர்ட்ஸில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களான மொஹமட் ஆசிப், மொஹமட் ஆமிர் ஆகியோர் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறையற்ற பந்துகளை வீசியதற்காகவும், அந்தச் சதித்திட்டத்திற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டதற்காக அப்போதைய அணித்தலைவராக சல்மான் பட்டிற்கும் எதிராக இங்கிலாந்தில் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கும் சிறைத்தண்டனைகள் வழங்கப்பட்டன. மொஹமட் ஆமிர் சிறியவர் என்பதால் சிறுவர் நன்னடத்தைப் பள்ளியில் 6 மாதங்களுக்கும், மொஹமட் ஆசிப் இற்கு 12 மாத சிறைத் தண்டனையும், சல்மான் பட்டிற்கு 30 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இதில் மொஹமட் ஆமிர் 3 மாதங்களிலும், ஆசிப் 6 மாதங்களிலும் விடுவிக்கப்பட்டிருந்தனர். 30 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்த சல்மான் பட் 7 மாதங்களில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் சல்மான் பட் உத்தியோகபூர்வமாக நாடு கடத்தப்பட்டுள்ளார் என்பதால் அடுத்த 10 வருடங்களுக்கு இங்கிலாந்திற்குச் செல்ல சல்மான் பட் இற்கு தடை காணப்படுகிறது.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசி சல்மான் பட், தான் எந்தக் குற்றங்களையும் செய்யவில்லை எனவும், எந்தவிதமான முறைகேடுகளிலும் தான் பங்கேற்றிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும் ஸ்பொட் ஃபிக்சிங் இற்கான அழைப்பு விடுக்கப்பட்ட போது அதை சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையிட்டிருக்க வேணடும் எனவும், அதைச் செய்யாமை தனது தவறு எனவும் தெரிவித்தார்.

4 மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டிருந்த மொஹமட் ஆமிர், தன்னை இக்குற்றத்தில் சல்மான் பட் அச்சுறுத்தி ஈடுபட வைத்ததாக பகிரங்கமாக தொலைக்காட்சிப் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தமை ஞாபகப்படுத்தத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X