2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இந்திய முன்னாள் பிரதமர் குஜ்ரால் மரணம்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 30 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால் தனது 92ஆவது வயதில் இன்று மாலை 3.27க்கு காலமானார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குஸ்ரால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1997ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்தியாவின் 12ஆவது பிரதமராக பதவி வகித்தவர் ஐ.கே.குஜ்ரால். 1919ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி, பஞ்சாப்பின் ஜீலம் பகுதியில் (இப்பிரதேசம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது) பிறந்த குஜ்ரால், 1942ஆம் ஆண்டில் இடம்பெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்றவராவார்.

ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றிய ஐ.கே.குஜ்ரால், 1975இல் தகவல் தொடர்பு மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தார். பின்னர் சோவியத் யூனியனுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டார்.

1980களில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஜனதா தளத்தில் இணைந்தார். 1989-இல் பஞ்சாப்பின் ஜலந்தர் எம்.பி. தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

1996ஆம் ஆண்டு தேவகவுடா அமைச்சரவையிலும் வெளியுறவுத்துறை அமைச்சரானார். அதன் பின்னர் ஐக்கிய முன்னணியின் தலைவராக ஐ.கே.குஜ்ரால் தேர்வு செய்யப்பட்டு 13 மாதங்கள் நாட்டின் 12ஆவது பிரதமராக பதவி வகித்தார்.

பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த குஜ்ராலுக்கு அண்மையில் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி, குர்கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் இன்று மாலை 3.27 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. (தற்ஸ்தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X