2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

கவிஞர் வாலி காலமானார்

Kanagaraj   / 2013 ஜூலை 18 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி. எஸ். ரங்கராஜன் என்றழைக்கப்படும் கவிஞர் வாலி இன்று வியாழக்கிழமை காலமானார். திருவரங்கத்தில் 1931 ஆம் ஆண்டு  ஒக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த வாலி தனது 82 ஆவது வயதில் சென்னையில் காலமானார்..

கடந்த ஜுன் 8 ஆம் திகதியன்று வசந்தபாலனின் தெருக்கூத்து படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல் எழுதிக்கொடுத்துவிட்டு வீடு திரும்பியவர் அன்றிரவே உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையிலேயே இன்று காலமானார்.

தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியருமான இவர் எழுதிய 'பாண்டவர் பூமி', 'கிருஷ்ண விஜயம்' போன்ற கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவையாகும்.

10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை  திரைப்படங்களுக்கு வாலி எழுதியுள்ளார். இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.'ஹேராம்', 'பார்த்தாலே பரவசம்' மற்றும் 'பொய்க்கால் குதிரை' ஆகியவை அவர் நடித்த திரைப்படங்களுள் குறிப்பிடத்தக்கவை.

தன் நண்பர்களின் துணையுடன் 'நேதாஜி' என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் அவர் ஆரம்பித்தார். அதன் முதல் பிரதியை எழுத்தாளரான 'கல்கியே' வெளியிட்டார்.

அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

திருவரங்கத்தில் வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிக்கையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான 'சுஜாதா' ஆவார்.

தமிழ் மேல் தீராத பற்று கொண்டிருந்த வாலிக்கு ஒவியத்திலும் ஆர்வம் மிகுந்திருந்தது. நன்றாகப் படம் வரையும் திறமையும் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஆனந்த விகடனில் ஓவியங்களை வரைந்து கொண்டிருந்த மாலியைப் போலவே தானும் ஒரு ஓவியராக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், அவருடைய பள்ளித் தோழன் பாபு, 'மாலி'யைப் போல சிறந்த சித்திரக்காரனாக வரவேண்டும் என்று கூறி டி. எஸ். ரங்கராஜனுக்கு 'வாலி' என்னும் பெயரைச் சூட்டினார்.

இவர், சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார். அவற்றுள் 'அம்மா', 'பொய்க்கால் குதிரைகள்', 'நிஜ கோவிந்தம்', 'பாண்டவர் பூமி', 'கிருஷ்ண விஜயம்' மற்றும் 'அவதார புருஷன்' ஆகியன குறிப்பிடத்தக்கவையாகும்.

  2007 ஆம் ஆண்டு   பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவிஞர் வாலி கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன்,  எங்கள் தங்கம் (1970) , இவர்கள் வித்தியாசமானவர்கள் (1979),வருஷம் பதினாறு , அபூர்வ சகோதரர்கள் (1989),  கேளடி கண்மணி (1990) ,   தசாவதாரம் (2008) என ஐந்து முறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • AMBI. Friday, 19 July 2013 08:33 AM

    ஐயா... நீங்கள் எல்லாம் இற‌ந்து போனால் தமிழ் பாடல்களும் இற‌ந்து போகுமோ என்று பயமாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X