2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

20 மணிநேரம் கடலில் தத்தளித்த மீனவர்

Princiya Dixci   / 2016 ஜூன் 03 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோ குடாக் கடலில் 20 மணித்தியாலங்களாகத் தத்தளித்த முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம், நேற்று வியாழக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.

வில்லியம் டேடன் (வயது 61) என்ற இந்த முன்னாள் கடற்படை வீரர், கடந்த  புதன்கிழமை (01) மெக்ஸிக்கோ குடாக் கடலில் தனிமையில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்து, நீரில் விழுந்துள்ளார்.

இதன்போது, உயிர்க்காப்பு மேலங்கியும் இவர் அணிந்திருக்கவில்லை.

இந்நிலையில், இவர் வீடு திரும்பாததையடுத்து கவலைப்பட்ட இவரது மனைவி உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அடுத்த நாள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் 20 மணித்தியாலங்களின் பின்னர் 15 கடல் மைல் தூரத்தில் இவரை உயிருடன் மீட்டுள்ளனர்.

'எப்படியும் என்னை யாரும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையோடு பகல் நேரத்தைப் போக்கினேன். ஆனால், இரவுப் பொழுது மிகவும் பயங்கரமாக இருந்தது' என தனது பயங்கரமான அனுபவத்தை வில்லியம் டேடன் ஊடகங்களுக்குப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், தன்னைக் குளிர் வாட்டியதாகவும் உடல் நடுங்கத் தொடங்கியதாகவும் எனினும், தான் நம்பிக்கை தளராமல் நீந்திக்கொண்டே இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கரையோரப் பாதுக்காப்புப் பிரிவினர், ஹெலிகொப்டரில் சென்று சுமார் இரண்டு மணித்தியாலத் தேடுதலின் பின்னர் இவரைக் கண்டு மீட்டுள்ளனர்.

'நான் கூர்ந்து கவனித்தேன். ஓர் உருவம் கையசைப்பது தெரிய, நான் சொல்ல முடியாத மகிழ்ச்சியடைந்தேன்' என கரையோரப் பாதுகாப்பு அதிகாரி ஜேக்கப் லாட்டூர், ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.  

கரையோரப் பாதுகாப்பு நீச்சல் வீரர், ஹெலிகொப்டரிலிருந்து உடனே பாய்ந்து அவரைக் காப்பாற்றினார்.

அப்போதும் வில்லியம் டேடன், நன்றாகவே இருந்தார் என காப்பாற்றச் சென்ன கரையோரப் பாதுகாப்பு நீச்சல் வீரர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .