2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

‘அகற்ற தயார்’

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வி​னோத்

கடலட்டைப் பண்ணைகள் சரியான முறையில் உரிய நியதிகளுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள குருநகர்  கடலட்டைப் பண்ணையாளர்கள், சட்டவிரோத பண்ணை இருந்தால் காட்டுங்கள் அதனை அகற்றுவதற்கு தயாராக இருக்கிறோம் என்றனர். 
 
  கடற்றொழிலாளர்களின் வாழ்வில் ஏற்படுத்தப்பட்டு வருகின்ற பொருளாதார மீட்சியை குழப்புகின்ற வகையில் கடலட்டைப் பண்ணை தொடர்பாக வெளியாகி வருகின்ற கருத்துக்கள் எமக்கு வேதனை தருகிறது. 
 
கடலட்டைப் பண்ணைகள் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியே அமைக்கப்பட்டு வருகின்றது. எனினும் சில கடலட்டைப் பண்ணைகளுக்கான அனுமதிப் பத்திர ஆவணங்கள் இதுவரை கிடைக்கவில்லை. அதற்காக அவற்றை சட்ட விரோத பண்ணைகளாக கருத முடியாது. 
 
கடலட்டைப் பண்ணை சட்டவிரோதமானது என பேசுகிறார்கள்.அதைப் பற்றி எமக்குத் தெரியாது அதைப் பற்றி நாம் பேசப்போவதும் அல்ல. நாம் எமது பகுதிகளில் கடலட்டை வளர்ப்புக்காக உரிய அனுமதிகளுக்கு விண்ணப்பித்தும் அனுமதி பெற்றும் அட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறோம். 
 
சிலர் கடல் மாசடையும். மீன்வளம் பெருகாது என ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்றனர். அட்டை வளர்ப்பில் ஈடுபடும் கடல் பகுதியானது சுமார் ஒரு அடி கடல் நீர் உள்ள சூடான பகுதியிலே மேற்கொள்ளப்படுகிறது.சூடான நீரில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதோ அல்லது முட்டையிடுவது மிகவும் சாத்தியம் குறைவு. இதைப் பற்றி பேசுபவர்களுக்கு அனைத்து விடயங்களும் தெரிந்தும் மக்களை குழப்பும் வகையில் முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
மக்கள் எதிர்கொள்கின்ற பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் எடுத்து, கடற்றொழில் அமைச்சர் இருக்கின்ற காலப் பகுதியில் எமது மக்களுக்கான நிரந்தர வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்திவிட வேண்டும். எனினும், குறித்த தளுவல் அனுமதிகள்  அமைச்சரினால் தான்தோன்றித்தனமாக வழங்கப்படுவதில்லை. 
 
கடற்றொழில் சங்கங்கள்,நீரியல் திணைக்களம், நாரா, நக்டா, சம்மந்தப்பட்ட பிரதேச செயலகம் உட்பட்ட சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் பரீட்சித்து, குறித்த இடத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைக்கப்படுகிறது. 
 
நீர் வாழ் உயிரினங்களுக்கோ அல்லது சூழலுக்கோ எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்திய பின்னர், சம்மந்தப்பட்ட பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களுடன் புரிந்துணர்வை ஏற்படுத்திய பின்னரே, பண்ணைகள் அமைப்பதற்கு அனுமதிகள் அளிக்கப்படுகின்றன. 
 
குருநகர் மற்றும் அல்லைப்பிட்டிப் பகுதிகளில் காணப்படும் கடல் அட்டைப் பண்ணைகள் கடற்றொழில் சங்கத்தின் அனுமதி  நீரியல் திணைக்களம் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதி பெற்றுச் செயல்படுத்தப்படுகிறது. 
 
ஆகவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் முகமாக ஒரு சிலர் செயல்படுவது கவலை அளிக்கின்ற நிலையில் சட்ட விரோத பண்ணைகள் இருக்கிறது எனக் கூறுபவர்கள் அதனை இனங்காட்டுங்கள் அகற்றுகிறோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X