2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

'தமிழர்களின் பலம் குன்றியமைக்கு தமிழ் அரசியல் தலைமைகளே காரணம்'

Suganthini Ratnam   / 2016 மார்ச் 29 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனைத்தொகுதியில் தமிழர்களின் பலம் குன்றியமைக்கு தமிழ் அரசியல் தலைமைகளே காரணமாக இருந்துள்ளதாக கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு, மாநகர முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் திங்கட்கிழமை (28) பிற்பகல் ஆரம்பமாகியது.

இதன்போது, கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்றத்துக்காக  அமைக்கப்பட்ட வரவேற்புக் கோபுரத்தை அகற்றுமாறு கோரிக்கை விடுத்து உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்ற விழாவுக்காக கடந்த ஏழாம் திகதி அப்பள்ளிவாசல் அமைந்துள்ள தரவைக் கோவில் வீதியின் தொடக்கத்தில் கோவிலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட வரவேற்புக் கோபுரமானது, விழா நிறைவுற்றதும் அகற்றப்படுமென்று முதல்வர் உறுதியளித்திருந்தார். எனினும், விழா முடிவுற்று பல நாட்களாகியும் அது  அகற்றப்படாமலிருப்பது கவலையளிக்கிறது' என்றார்.  

'2014ஆம் ஆண்டு தரவைக் கோவில் வீதியின் பெயரை கடற்கரைப் பள்ளிவாசல் வீதியென மாற்றுவதற்கு இந்தச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்போது, வரலாறு தெரியாத சில உறுப்பினர்கள் பல்வேறு வகையான நியாயங்களை குறிப்பிட்டிருந்தனர். அது இடைநிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்ற விழாவுக்காக வழமைக்கு மாறாக அவ்வீதியில் வரவேற்புக் கோபுரம் அமைக்கப்பட்டமை தமிழ் மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

தமிழர்களின் எதிர்ப்பினால் சிலவேளையில் பாரதூரமான சம்பவம் ஏற்படலாமென நான் அஞ்சினேன். அதனால், அது அமைக்கப்பட்ட முதல் இரவு விடிய விடிய கோவிலுக்கு முன்பாக நான் நின்றுகொண்டு கோபுரத்தைப் பாதுகாத்தேன். விடிந்ததும் முதல்வருடன் தொடர்புகொண்டு நிலைமையை எடுத்துக்கூறினேன். அதற்கு அவர், கொடியேற்ற விழா நிறைவுற்றதும் அதை அகற்றுவதற்கு தான் ஆவன செய்வதாக என்னிடம் உறுதியளித்தார். ஆனால், அது இன்னும் அகற்றப்படவில்லை. அது தொடர்பில் முதல்வரின் நிலைப்பாட்டை அறிய விரும்புகிறேன்' என்றார்.

'கல்முனைத் தமிழர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்படுவதற்கு எமது முந்திய அரசியல் தலைமைகளே காரணமாவார்கள். 1967ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அம்பாறை மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்டபோது, கல்முனைத் தொகுதியுடன் இருந்துவந்த கல்லாறு, துறைநீலாவணை போன்ற தனித் தமிழ்க் கிராமங்களை அப்போதிருந்த ஒரு தமிழ் அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக, அவரது வெற்றி வாய்ப்பை உறுதிப்படுத்துவதற்காக பட்டிருப்புத்தொகுதியுடன் இணைத்துள்ளார். இதனாலேயே,  கல்முனையில் இருந்துவந்த தமிழர்களின் பெரும்பான்மைப்பலம் இழக்கப்பட்டது. அதுபோன்று, 1947ஆம் ஆண்டு கல்முனை பட்டினசபை உருவாக்கப்பட்டபோது, தமிழர்களுக்கான வட்டாரங்கள் குறைக்கப்பட்டு, முஸ்லிம்களுக்கான வட்டாரங்கள் அதிகரிக்கப்பட்டன.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் அமைந்துள்ள ஏழு ஏக்கர் காணி கூட தமிழர்களுக்கே சொந்தமாக இருந்தது. அதனை அந்த தமிழ் வட்டாரத் தலைவரே விட்டுக்கொடுத்திருந்தார்' எனவும் அவர் கூறினார்.

இதற்குப் பதிலளித்த மாநகர முதல்வர், 'எதிர்க்கட்சித் தலைவர் கே.ஏகாம்பரம் அன்றையதினம் என்னுடன் தொடர்புகொண்டு இவ்விடயத்தை  தெரியப்படுத்தினார். இது தொடர்பில் எனது செயலாளர் ஊடாக கடற்கரைப் பள்ளிவாசல் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடியபோது, கொடியேற்ற விழா நிறைவுற்றதும் அகற்றுவதாகத் தெரிவித்தனர். அதன்படியே நான் உறுதியளித்தேன். ஆகையால் உறுதியளித்தவாறு அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பேன்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .