2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

திருக்கோவிலில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2017 மே 30 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹ்மத்துல்லா, பா.மோகனதாஸ், வி.சுகிர்தகுமார்

திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் காட்டுப்பகுதியை அண்டிய கிராமங்களிலுள்ள மக்களை யானைகளிடமிருந்து பாதுகாக்குமாறு கோரியும் அக்கிராமங்களில் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ள மின்சார வேலி அமைக்கும் பணியை பூர்த்தி செய்யுமாறு கோரியும் அங்கு இன்று காலை ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

தங்கவேலாயுதபுரம், கஞ்சிகுடிச்சாறு, சாகாமம், தாண்டியடி, ஸ்ரீவள்ளிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அபிவிருத்திச் சங்கங்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில்  பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

விநாயகபுரம் கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) இரவு யானை தாக்கி உயிரிழந்த பெண்ணின் வீட்டடியிலிருந்து ஆரம்பமாகிய பேரணி, திருக்கோவில் பிரதேச செயலகத்தைச் சென்றடைந்தது. அச்செயலக அலுவலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு பாரிய ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.  

இவ்வேளையில் கடமைக்காக அலுவலகத்துக்கு வந்த பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர் ஆகியோரை அலுவலகத்துக்குள் செல்லாவிடாது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், தங்களது உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்குமாறும் அவர்களிடம்; வேண்டுகோள் விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவிக்கையில், 'காட்டு யானைகளின் நடமாட்டம் காரணமாக  தினமும் நாங்கள் அச்சத்துடன் வாழ்கின்றோம்.   

இந்தப் பிரச்சினை தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லும்போது, அவர்கள் கால அவகாசம் கேட்கின்றார்களே தவிர, இந்தப் பிரச்சினையை இதுவரையில் தீர்த்து வைக்கவில்லை' என்றனர்.  

இதற்குப் பதிலளித்த திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன்,'யானைகளிடமிருந்து பாதுகாப்புப் பெறும் வகையில் மின்சார வேலி அமைக்கும் பணி, 2014ஆம் ஆண்டில் தாண்டியடியிலிருந்து சாகாமம்வரை 45 கிலோமீற்றர் தூரத்துக்கு முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மின்சார வேலி அமைக்கும் தங்கவேலாயுதபுரம்வரை சுமார் 10 கிலோமீற்றர் தூரத்துக்கே பூர்த்தியாக்கப்பட்டுள்ளது. அதற்கப்பால், மின்சார வேலி அமைக்கும் பணி முன்னெடுக்கப்படவில்லை.

இந்த மின்சார வேலி அமைக்கும் பணியை பூர்த்தி செய்வதற்கு நிதி வசதி இல்லாமை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும், மின்சார வேலி அமைக்கும் பொறுப்பு பிரதேச செயலகத்துக்கு உரியதல்ல என்பதுடன், அப்பொறுப்பு வனஜீவராசிகள் திணைக்களத்துக்கே உரியதாகும்.

எனவே, எமக்கு நிதி வழங்கப்பட்டு நாம் அப்பணியை முன்னெடுத்திருந்தால், அப்பணியை பூர்த்தி செய்வதற்கான முயற்சியை செய்திருக்கலாம்.

இந்நிலையில் 3 மாதங்களுக்குள் மின்சார வேலி அமைக்கும் பணியை பூர்த்தி செய்து தருவதாக மாவட்டச் செயலாளர் தற்போது அறிவித்துள்ளார். ஆகவே, இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .