2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

'முஸ்லிம் தேசிய கூட்டு முன்னணியை ஏற்படுத்த முன்வர வேண்டும்'

Suganthini Ratnam   / 2016 மே 22 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் ஒன்றுசேர்ந்து முஸ்லிம் தேசிய கூட்டு முன்னணியை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், 'அண்மைக்காலமாக முக்கிய சிரேஷ்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் மத்தியிலும் முஸ்லிம்கள் மத்தியிலும் அரசியல் ரீதியாக புதிய சிந்தனைகள், மனப்பாங்குகள் மேலோங்கி முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசிய கூட்டு முன்னணி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வெளிவந்துகொண்டிருப்பது பற்றி முஸ்லிம் சமூகம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்' என்றார்.

'இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், மலைநாட்டுத் தமிழர்கள் போன்ற சமூகங்களைச் சேர்ந்தவர்களுடைய அரசியல் கட்சிகள், காலத்துக்கேற்ற வகையில் தனது சமூகத்தின் அரசியல் உரிமைகளுக்காகவும் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும்  நிபந்தனையின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஆட்சிக்கு வரும் அரசாங்கத்துடன் இணைந்தும் எதிர்த்தும் வருவதை நாம் காண்கின்றோம்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதன் பின்னர் வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள் தனிக்கட்சிகளாக மகுடம் சூட்டிக் கொண்டதன் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்காக இதுவரையில் பெற்றுக்கொடுத்த உரிமைகள் என்ன? முஸ்லிம் சமூகத்துக்காக நடத்திய போராட்டம் என்ன? இலங்கை முஸ்லிம்களுக்காக எதனைப் பெற்றுக்கொடுத்துள்ளார்கள்?

 பல்லினச் சமூகங்கள் வாழ்கின்ற இலங்கையில் எல்லா சமூகத்தவர்களுடனும் ஒற்றுமையாக இணைந்து வாழவேண்டும் எனக்கூறும் முஸ்லிம் கட்சித் தலைமைகள், கட்சிகளை ஒன்றுகூட்டி சமூக அடிப்படையில் வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் கட்சித் தலைமைகள் ஏன் ஒன்றுபட முடியாது? கடந்த காலத்தில் முஸ்லிம் கட்சித் தலைமைகள் முஸ்லிம் சமூகத்துக்காக எதையும் சாதிக்க முடியாது போனதை ஏற்றுக்கொண்டு முஸ்லிம் கட்சிகளை கூட்டாக்கி முஸ்லிம் தேசிய கூட்டமைப்பை ஏற்படுத்தி முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முஸ்லிம் கட்சித் தலைமைகள் முன்வர வேண்டும்' எனவும் அவர் மேலும் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .