2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

'பதவிக்காலம் முடியும் தறுவாயில் அபகீர்த்தியை ஏற்படுத்துவது வேண்டுமென்ற செயலெனக் கருதுகிறோம்'

Suganthini Ratnam   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சுமார் ஆறு வருடங்களாக இப்பல்கலைகழகத்தின் உபவேந்தர் பதவியை மிகப் பொறுப்புடன் நிறைவேற்றிவரும் எனது பதவிக்காலம் முடியும் தறுவாயில் இத்தகைய அபகீர்த்தியை ஏற்படுத்துவது வேண்டுமென்ற செயல் என்றே தாம் கருதுகிறோம் என அப்பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயிலினதும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தத்தக்கதாக வெளிவருகின்ற குற்றச்சாட்டுக்களை கண்டித்து பல்கலைக்கழகத்தின் கல்விசாரா ஊழியர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயிலிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,  

'புதிதாக உருவாக்கப்பட்ட பொறியியல்பீடம், நவீன வசதிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட விடுதிகள், கணினி முறையில் வடிவமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்ட அஷ்ரஃப் ஞாபகார்த்த நூல் நிலையம், இஸ்லாமிய கற்கைகள் அரபுமொழி பீடத்திற்கான புதிய கட்டிடத்தொகுதி, பொறியியல்பீட ஆய்வுகூடம், ஒலுவில் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான மஹாபொல பயிற்சி நிலையம் பொறியியல் பீடத்திற்கு உள்வாங்கப்பட்டமை, பல்கலைக்கழக உள்வாயிலானது உள்ளே மற்றும் வெளியே செல்வதற்கான கார்பட் பாதைகள் மேலும் இதேவேளை நிர்மாணிக்கப்பட்டுவரும் நான்கு மாடிகளைக் கொண்ட ஆண் பெண் இரு விடுதிகள் முதலானவை இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய சான்றாகும்.

குற்றச்சாட்டுக்களை யாரும் எத்தனை பக்கத்திலும் முன்வைக்க முடியும். ஆனால், அதன் உண்மைத்தன்மையை அறிதல்வேண்டும். ஒரு உபவேந்தர் உத்தியோகபூர்வமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைவாக ஒரு வருடத்தில் மூன்று வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல முடியும். தனிப்பட்ட முறையில் அதாவது தனது சொந்தச் செலவில் எத்தனை பயணங்களும் செல்லலாம். தனக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே அவர் வெளிநாட்டுப் பயணங்கள் அமைந்ததாக உபவேந்தர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டுப் பயணங்களால் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் உலகெங்கும் பேசப்படும் ஒன்றாக மாறியுள்ளது. இப்பல்கலைக்கழகத்தில் இன்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தமது பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல்கலைக்கழக நிதி நிர்வாகம் ஒரு சிறு செலவைக்கூட சட்டப்படி சுற்றுநிரூபங்களுக்கு அமைவாக பல்வேறுபட்ட சிபாரிசுகளையும் அனுமதியையும் அடுத்தே மேற்கொண்டு வருகின்றமையையும் அவர் சுட்டிக்காட்டினார்.இங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடமும் ஜனாதிபதி செயலக புலன் விசாரணைப் பிரிவிடமும் கையளிக்கப்பட்ட விடயம் தொடர்பாக நாங்கள் எந்த விதமான விசாரணைகளுக்கும் விளக்கம் கொடுக்கவும் தெளிவுபடுத்தவும் ஆயத்தமாக இருக்கிறோம்' எனக் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X