2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பாம்பாட்டியுடன் இருக்கும் வரைக்குமே பாம்புக்கு பாதுகாப்பு

A.Kanagaraj   / 2021 பெப்ரவரி 15 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாம்பாட்டியுடன் இருக்கும் வரைக்குமே பாம்புக்கு பாதுகாப்பு

பல பக்கங்களில் இருந்தும், அரசாங்கம் நெருக்குதல்களுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆளும் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாகவே, காதுகளுக்குக் கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. இது, அரசாங்கம் பலவீனமான பயணத்தைத் தொடர்கிறது என்பதே அர்த்தமாகும்.

இதில், ஜெனீவா கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம்,  சிறுபான்மை இனங்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறுதல், தொல்பொருள் அகழ்வு எனும் திரைக்குப் பின்னால் நின்றுக்கொண்டு பூர்வீக காணிகளையும், வழிபாட்டிடங்களையும் அபகரித்தல், கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக அதிகரித்தல், அத்தியாவசியப் பொருள்களில் விலையேற்றம் இவையெல்லாம் சிலவாகும்.

இதற்கிடையில், இராஜதந்திர ரீதியிலான செயற்பாடுகளில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பின்னடைவும்  கருதவேண்டியுள்ளது. இவையெல்லாவற்றுக்கும் முன்பாக, ஜெனீவா கூட்டத்தொடர் இருந்தாலும், தாமரை மொட்டைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ‘தலைமைத்துவ மாற்றம்’ தொடர்பிலான சர்ச்சையும் வலுப்பெற்றுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷவை ஆட்சிப்பீடமேற்றவும், கொழும்பிலுள்ள ​ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக உண்ணாவிரதமிருந்து அன்றைய அரசாங்கத்தை சர்வதேனத்தின் முன், சூழ்நிலை கைதியாக நிற்கவைத்தமைக்கான பெரும் பங்கை, அமைச்சர் விமல் வீரவங்சவே வகித்தார் என்றெல்லால் தவறே இல்லை. அவரும் இந்த அரசாங்கத்தின் பங்காளியாவார்.

கூட்டணியில் இருக்கும் பங்காளிகளின் கருத்து சுதந்திரம் மதிக்கப்படவேண்டும். அதேபோல, அந்தக் கூட்டணியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படுத்தவேண்டுமென பொதுவெளியில் கதைப்பதற்கு பங்காளிகளுக்கு அருகதையில்லையென்றே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயலாளர் சட்டத்தரணி சாகல காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதனைத்தான், “பாம்பாட்டியுடன் இருக்கும் வரைக்கும்தான் பாம்புக்கு பாதுகாப்பு, தனித்துப் படமெடுத்து ஆடினால், அச்சமடைந்த மக்கள் அடித்​​தே கொன்றுவிடுவர்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

உண்மையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, எந்த கட்சியிலும் உறுப்புரிமை பெற்றுக்கொள்ளாத ஒருவர்; அவரிடத்தில் கட்சி அரசியல் இல்லை. ஆனால், பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, இந்த அரசாங்கத்துக்குக் கிடைப்பதற்கு, ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியின் ஊடாகவே வழிசமைத்தவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இதேவேளை, விலையேற்றத்தால் அன்றாடம் ஜீவியம் நடத்துவதற்குக்கூட முடியாமல், மக்கள் திணறிக்கொண்டிருக்கின்றனர். அதனை திசைத்திருப்புவதற்காவே ‘தலைமைத்துவ மாற்றம்’ என்றொரு குண்டு போடப்பட்டுள்ளதென விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்க்கட்சியினரும், உட்கட்சிப் பூசல்களுக்கு வெவ்வேறான படங்களைக் கீறி, அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கின்றன.

அரசாங்கத்தை வழிநடத்திக் கொண்டிருப்பவர், பிரதமர் அவருடன் இணைந்து பயணித்தால் மட்டுமே, நன்மை பயக்கும்; தனித்தோடினால், மக்கள் நிராகரித்துவிடுவர் என்ற அர்த்தத்துடனேயே ‘பாம்பு’ கதையும் கூறப்பட்டுள்ளது. இது, அரசியலுக்கு மட்டுமன்றி, சகலதுறைகளுக்கும் பொதுவானது என்பதால், முரண்பாடுகளைக் களைந்து பயணித்தலே, நல்வழிப்படுத்தும்; நாட்டுக்கும் நன்மை பயக்கும் என்பதே எங்களது அவதானிப்பாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .