2021 மார்ச் 08, திங்கட்கிழமை

அரசியலுக்கு வந்துள்ள கமலுக்கு சிவாஜி நிலைமைதான் ஏற்படும்

Editorial   / 2019 நவம்பர் 12 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

  சேலம்

அரசியலில் கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் நிலைமைதான் ஏற்படுமென, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் ஓமலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி மேலும் கருத்துதெரிவித்தார்தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கமல், ரஜினி கூறுகின்றனரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, ''வெற்றிடம் என்று சொன்னவர் ஏன் இரண்டு தேர்தலில் போட்டியிடவில்லை? போட்டியிட்டிருக்கலாமே. மிகப்பெரிய தலைவர்தானே கமல்ஹாசன். கமலுக்கு வயதாகிவிட்டது, சினிமாவில் தகுந்த வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அதில் தவறில்லை. ஆனால், மற்றவர்களைக் குறை சொல்வது தவறு.

இத்தனை காலமாக அவர் எங்கே சென்றார்? 1974-ல் இருந்து அதிமுகவில் நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். எடுத்தவுடன் நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் கட்சிக்காகப் பணியாற்றினோம். மக்களுக்காகப் பல போராட்டங்கள் நடத்திச் சிறை சென்றிருக்கிறோம். மக்களின் ஆதரவைப் பெற்று இன்று இந்த நிலைமைக்கு உயர்ந்திருக்கிறோம்.

அவர் மக்களுக்கு என்ன பணி செய்தார்? திரைப்படத்தில் நடித்து தங்களின் வருமானத்தை ஈட்டிக்கொண்டனர். இன்றுவரை படங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இன்று வரை அதன்மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். அவர்கள் மக்களிடத்தில் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக்கொள்கின்றனர்.

மிகப்பெரிய நடிகர் சிவாஜி கணேசனுக்கு தேர்தலில் என்ன நிலை ஏற்பட்டது என அனைவருக்கும் தெரியும். அவரை விட மிகச்சிறந்த நடிகர் இல்லை. எம்ஜிஆருக்கு அடுத்த கட்டத்தில் சிவாஜி இருந்தார். சிவாஜி நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்கள் படத்தைப் பார்த்தால் போதும் என்ற நிலைக்கு கமல் வந்துவிட்டார் என நினைக்கிறேன். அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை ஊராட்சிகள், நகராட்சிகள் இருக்கு என தெரியுமா? படம் நடித்து மக்களின் பணத்தை வாங்கிக்கொண்டனர். அந்தப் பணத்தின் வாயிலாக அரசியலில் இருக்கின்றனர்’’ என்றார்.

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் கமல் நிலைமைதான் ஏற்படுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளிக்கையில், ''ஊகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. கட்சி ஆரம்பித்ததும் பதில் சொல்கிறேன்’’ என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .