2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

அப்பிளின் உதவியின்றி ஐபோனுக்குள் புகுந்தது எஃப்.பி.ஐ

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 29 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு டிசெம்பரில், அமெரிக்காவின் சான் பெர்னான்டினோவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் நபரின் ஐபோன் அலைபேசிக்குள், அப்பிள் நிறுவனத்தின் உதவியின்றிப் புகமுடிந்ததாக அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் திணைக்களம் (எப்.பி.ஐ) அறிவித்துள்ளது. குறித்த தாக்குதலை மேற்கொண்டதாகக் கருதப்படும் சையட் றிஸ்வான் பாரூக்கின் ஐபோனே, இவ்வாறு எப்.பி.ஐ-ஆல் உட்புகப்பட்டுள்ளது.

குறித்த அலைபேசியைக் கைப்பற்றியிருந்த எப்.பி.ஐ, கடவுச்சொல் மூலம் அது பாதுகாக்கப்பட்டிருந்ததன் காரணமாக, அதனுள் காணப்படும் தகவல்களைப் பெற்றுக்கொள்ள உதவுமாறு, அப்பிள் நிறுவனத்திடம் கோரியிருந்தது. அதற்கெதிராக வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வந்தன. அதற்கு, அப்பிள் நிறுவனம் மறுப்புத் தெரிவித்து வந்தது.

இந்நிலையிலேயே, மூன்றாந்தரப்பொன்றின் உதவியுடன், குறித்த அலைபேசியின் தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ளதாக, நீதிமன்றத்திடம் எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. இதனால், அப்பிள் நிறுவனத்துக்கெதிரான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூன்றாந்தரப்பு யாரென்பதை, எப்.பி.ஐ இன்னமும் வெளியிடவில்லை. அத்தோடு, என்ன முறையைப் பயன்படுத்தி அந்த ஐபோனுக்குள் புகுந்து, தரவுகளைப் பெற்றுக் கொண்டார்கள் என்பதையும் வெளிப்படுத்தப் போவதில்லை என அறிவித்துள்ளது.

இவ்வாறு இந்த அலைபேசிக்குள் புகுந்து தரவுகளைப் பெற்றுக் கொண்டதால், எப்.பி.ஐ-க்கும் அப்பிள் நிறுவனத்துக்குமிடையில் இடம்பெற்றுவந்த முறுகல் நிலை முடிவுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மூன்றாந்தரப்பொன்றின் உதவியுடன், ஐபோன் ஒன்றின் தகவல்கள் பெறப்பட்டுள்ளமை, அப்பிள் அலைபேசிகளின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்குவதாக அமைந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .