2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

இஸ்தான்புல் தாக்குதலில் நால்வர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 20 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் சந்தை மாவட்டமான இஸ்தான்புல்லில், கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, குறைந்தது நான்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அத்தோடு, 36 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கெனவே, துருக்கியின் தலைநகர் அங்காராவில் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில்,ஒரு வார காலப்பகுதிக்குள், துருக்கியின் பிரதான நகரொன்றில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது தாக்குதலாக இது அமைந்தது.

குறித்த நகரம், சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லும் நகரமென்ற அடிப்படையில், வெளிநாட்டவர்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்படி, கொல்லப்பட்ட 4 பேரில் மூவர், இஸ்ரேலைச் சேர்ந்தவர்களெனவும் மற்றையவர் ஈரானைச் சேர்ந்தவரெனவும் அறிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்ட 3 இஸ்ரேலியர்களில் இருவர், அமெரிக்க பிரஜாவுரிமையைக் கொண்டவர்களென, அமெரிக்கா அறிவித்துள்ளது. காயமடைந்த 36 பேரில் 13 பேர் வெளிநாட்டவர்களென அறிவிக்கப்படுகிறது. 6 பேர் இஸ்ரேலியர்களெனவும் இருவரும் அயர்லாந்தைச் சேர்ந்தவர்களெனவும் ஏனைய நால்வர், ஜேர்மனி, ஐஸ்லாந்து, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களென அறிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலை எக்குழு நடத்தியது என்பது தொடர்பான உறுதியான தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், அரச சார்பான ஊடகங்கள், இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுதக்குழுவே காரணம் எனத் தெரிவித்தன.
தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த துருக்கி பிரதமர் அஹ்மட் தெவுடொக்லு, தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து, நீதியைப் பெற்றுக் கொடுக்கவுள்ளதாகச் சூளுரைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .