2021 மே 18, செவ்வாய்க்கிழமை

ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ முந்தியது போகோ ஹராம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் மோசமான பயங்கரவாதக் குழுவாக, போகோ ஹராம் ஆயுதக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுவை முந்தியே, போகோ ஹராம் ஆயுதக் குழு, மோசமான பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவைத் தலைமையகமாகக் கொண்ட பொருளாதாரத்துக்கும் சமாதானத்துக்குமான நிறுவகத்தால், 2000ஆம் ஆண்டு முதல் வெளியிடப்படும் இந்த அறிக்கையின், இவ்வருடத்துக்கான அறிக்கையிலேயே, இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டு முடிவு வரை, 61,000க்கும் அதிகமான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடாத்தப்பட்டு, 140,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில், 2014ஆம் ஆண்டில் மாத்திரம் 32,658 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது, 2013ஆம் ஆண்டில் கொல்லப்பட்ட 18,111 பேரோடு ஒப்பிடும் போது, 80 சதவீத அதிகரிப்பாகும். அத்தோடு, 2000ஆம் ஆண்டிலிருந்து 2014ஆம் ஆண்டுவரை ஏற்பட்ட அதிகமான உயிரிழப்பாக, 2014ஆம் ஆண்டே காணப்படுகிறது.

பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளாக, ஈராக், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா ஆகியன காணப்படுகின்றன. 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிரிழப்புகளில் 78 சதவீதமானவை, இந்த 5 நாடுகளிலேயே இடம்பெற்றுள்ளன. இதில், ஈராக்கில் 9,929 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.

இறுதி 5 வருடங்களில் ஏற்பட்ட பயங்கரவாத இழப்புகள், ஆபத்துகள் ஆகியவற்றைக் கணித்து, பயங்கரவாதச் சுட்டி தயாரிக்கப்பட்டு, நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில், முதல் 20 நாடுகளாக, ஈராக், ஆப்கானிஸ்தான், நைஜீரியா, பாகிஸ்தான், சிரியா, இந்தியா, யேமன், சோமாலியா, லிபியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், உக்ரைன், எகிப்து, மத்திய ஆபிரிக்கக் குடியரசு, தென்சூடான், சூடான், கொலம்பியா, கென்யா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, கமரூன்.
இதில், முதல் 10 இடங்களுக்குள் அதிக தடவைகள் காணப்பட்ட நாடாக, இந்தியா இருக்கிறது. 14 தடவைகள், அந்நாடு முதல் 10 இடங்களுக்குள் காணப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் 13 தடவைகளும், ஈராக் 12 தடவைகளும் முதல் 10 இடங்களுக்குள் காணப்பட்டுள்ளன.

கடந்தாண்டில், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய பயங்கரவாதக் குழுவாக, போகா ஹராம் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவால், 6,644 உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது, முன்னைய ஆண்டோடு ஒப்பிடும்போது, 317 சதவீத அதிகரிப்பாகும். ஐ.எஸ்.ஐ.எஸ்-இனால், 6,073 உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், மோதல் களத்தில் ஏற்பட்ட 20,000க்கும் அதிகமான உயிரிழப்புகளுக்கும் அவ்வமைப்புக் காரணமாக அமைந்துள்ளது.

மூன்றாவது அதிக உயிரிழப்புகளை தலிபான்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும், 3,310 உயிரிழப்புகளும், மத்திய ஆபிரிக்கக் குடியரசிலும் நைஜீரியாவிலும் செயற்படும் புலானி ஆயுததாரிகள், 1,229 உயிரிழப்புகளை ஏற்படுத்தி, நான்காவது இடத்தில் உள்ளனர். ஐந்தாவது குழுவாக, அல்-ஷபாப் குழு காணப்படுகிறது. எதியோப்பியா, கென்யா, சோமாலியா போன்ற நாடுகளில், 1,021 உயிரிழப்புகளை, அவ்வமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .