2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

சிரியாவில் பயங்கர விமானத் தாக்குதல்கள்

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 14 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் இட்லிப்பிலுள்ள சந்தை இடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களிலும் மத்திய ஹொம்ஸ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களிலும் டசின் கணக்கான சிரியர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

இட்லிப்பிலுள்ள அரிஹா நகரத்தில் புதன்கிழமை (13) மேற்கொள்ளப்பட்ட  தாக்குதல்களில், மூன்று சிறுவர்கள், ஒரு பெண் உள்ளடங்கலாக குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம், சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், சிரிய அரசாங்கத்தினதா அல்லது ரஷ்ய போர் விமானங்களாக தாக்குதல் நடத்தியது என தெளிவில்லாமல் உள்ளது.

இதேவேளை, மத்திய சிரியாவிலுள்ள ஹொம்ஸ் மாகாணத்தின் றஸ்டன் நகரத்தின் மீது அரசாங்கப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் மற்றும் விமானத் தாக்குதல்களில் 20 பேர் இறந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், குயூநெரிட்டாவில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த சிரிய கண்காணிப்பகம், தெற்கு டமஸ்கஸ் புறநகர்ப் பகுதி உள்ளிட்ட ஏனைய இடங்களிலும் விமானத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகக் கூறியுள்ளது.

இதேவேளை, அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்படும் அலெப்போ பகுதியில் எதிரணியினரால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்ததாக சிரிய அரசாங்கத்தின் அரச செய்தி முகவரகம் சனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சிரியாவுடனான ஜோர்டானிய எல்லையில் சிரிய அகதிகளுக்கான முகாமில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் குறைந்தது 40 பேர் காயமடைந்திருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .