2025 ஜூலை 09, புதன்கிழமை

பிரேஸிலில் இராணுவத்தைத் தரையிறக்கினார் தெமர்

Editorial   / 2017 மே 25 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேஸிலிய ஜனாதிபதி மிஷெல் தெமரின் இராஜினாமை வலியுறுத்துகின்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதுடன், தலைநகர் பிரேஸிலியாவிலுள்ள அமைச்சுக் கட்டடமொன்றினையும், நேற்று (24) தீ வைத்திருந்தனர்.

இதனையடுத்து, இராணுவத்தை வீதிகளில் தரையிறக்க, ஜனாதிபதி தெமர் உத்தரவிட்டுள்ளார்.   

பிரேஸிலியாவில் அமைதியாகக் கூடிய, ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய அமைச்சுகள், காங்கிரஸ் உள்ள புற்தரைப் பகுதி நோக்கி, ஜனாதிபதி தெமர் விலகவேண்டுமெனவும் அவரின் சிக்கனத் திட்டத்தை நிறுத்த வேண்டுமெனவும் கோரி, பேரணியாகச் சென்றனர்.   

காங்கிரஸ் கட்டடத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் அண்மித்த நிலையில், அவர்களைத் தடுக்கும்பொருட்டு, பொலிஸார், மீண்டும் மீண்டும் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், வெளிச்ச, சத்த கிரனேட்களை எறிந்ததுடன், இறப்பர் குண்டுகளின் மூலம் தாக்குதல் நடத்தியிருந்தனர். தங்களது பாதையைத் தடுத்த சில ஆர்ப்பாட்டக்காரர்களை தூக்கி எறிந்திருந்தனர். 

இந்நிலையில், முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிலடியாக, சக்திவாய்ந்த வாணவேடிக்கைகளை, பொலிஸாரின் மீது பிரயோகித்ததுடன், விவசாய அமைச்சின் வாயிற்பகுதியிலிருந்த தளவாடத்தைத் தீ வைத்ததுடன், அரச கட்டடங்களில், தெமருக்கெதிரான வாசகங்களை தீந்தைகள் மூலம் கிறுக்கியிருந்தனர்.

தனது கைத்துப்பாக்கியை, ஆர்ப்பாட்டக்காரர்களின் மீது பொலிஸ் அதிகாரியொருவர் சுடும் புகைப்படங்களை, உள்ளூர்த் தொலைக்காட்சியொன்று காண்பித்திருந்தது.   

2013ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிரேஸிலியாவில் இடம்பெற்ற வன்முறை மிகுந்த ஆர்ப்பாட்டமாக அமைந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், இரவாகும்போது,  ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்ல ஆரம்பித்திருந்தனர்.   

ஆர்ப்பாட்டக்காரரொருவர் சுடப்பட்டதாகவும், காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இறப்பர் குண்டு முகத்தில் தாக்கியதால், குறைந்தது இன்னோர் ஆர்ப்பாட்டக்காரர் மோசமாகக் காயமடைந்ததாக, உள்ளூர் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, வெடிக்கும் சாதனமொன்றை, அதிகாரிகளின் மீது எறிய முயலுகையில், தனது கையின் பாகமொன்றை, பிறிதோர் ஆர்ப்பாட்டக்காரர் இழந்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .