2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

மோர்சியை வெளியேற்றுவதற்கு எதிர்த்த எகிப்து நீதிபதிகள் 32 பேருக்கு ஓய்வு

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 29 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மொஹமெட் மோர்சியை 2013ஆம் ஆண்டு இராணுவம் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த முப்பத்திரண்டு நீதிபதிகளை கட்டாய ஓய்வில் எகிப்து உச்ச நீதிச் சபை அனுப்பியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மோர்சியின் ஆட்சிக்கெதிராக இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்களையடுத்து கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலையில், அப்போது இராணுவத் தளபதியாக இருந்த அப்டெல் பட்டா எல்-சிசியால் பதவியிலிருந்து மோர்சி அகற்றப்பட்டதையடுத்து, மதச்சார்பற்றவர்கள், தாராளவாதிகள் உள்ளடங்கலாக அனைத்து வகையான எதிர்தரப்பினர் மீதும் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கையின் ஒரு அங்கமே கடந்த திங்கட்கிழமை (28) எடுக்கப்பட்ட மேற்படித் தீர்மானம் எனப்படுகிறது.

மோர்சி அகற்றப்பட்டதையடுத்து, அரசியலில் தலையிட்டதையடுத்தும் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவளித்தையடுத்தும் 32 நீதிபதிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப உச்ச நீதிச் சபை முடிவெடுத்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரமும் இதே காரணத்துக்காக வேறு பதினைந்து நீதிபதிகளுக்கு இதே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீதிபதிகள் தொடர்பில் கரிசனையை வெளியிட்ட ஜூரிகளுக்கான சர்வதேச ஆணைக்குழு, முடிவை மாற்றுமாறு எகிப்தை வலியுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .