2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

COVID-19: வீடுகளுக்குள் 300 மில்லியன் மாணவர்கள்

Editorial   / 2020 மார்ச் 05 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகளாவிய ரீதியில் COVID-19-இன் தாக்கம் காரணமாக இத்தாலியும் பாடசாலைகளை மூடியுள்ள நிலையில் ஏறத்தாழ 300 மில்லியன் மாணவர்கள் வாரக்கணக்காக வீடுகளுக்குள் முடங்கவுள்ளனர்.

இன்றைய மட்டில் 80 நாடுகள், பிராந்தியங்களை எட்டிய COVID-19-ஆல் 95,000க்கும் மேற்பட்ட மக்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், 3,200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

சீனாவில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 3,012ஆக உயர்ந்துள்ளதுடன் அங்கு 80,409 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, இத்தாலியில் COVID-19-ஆல் 107 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3,089 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

ஈரானில், COVID-19-ஆல் 92 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், 2,922 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், தென்கொரியாவில் COVID-19 தொற்றுக்குளாகியோரின் எண்ணிக்கையானது 6,088ஆக உயர்ந்துள்ளதாகவும், 35 உயிரிழப்புகள் COVID-19-ஆல் ஏற்பட்டுள்ளதாக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான கொரிய நிலையங்கள் தெரிவித்துள்ளன.

இச்சந்தர்ப்பத்தில் நாளை முதல் முகக் கவசங்கள் ஏற்றுமதி செய்வது தடை செய்யப்படும் என தென்கொரியப் பிரதமர் சுங் சைய்-கையுன் கூறியுள்ளார். நாளொன்றுக்கு 10 மில்லியன் முகக் கவசங்களை தென்கொரியா உற்பத்தி செய்கிறது.

அந்தவகையில், 13 நாடுகள் பாடசாலைகள் மூடியுள்ள நிலையில் 290.5 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுவதாக நேற்று தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார நிறுவனம், ஒன்பது நாடுகள் உள்நாட்டு ரீதியான குறிப்பிட்டளவு பாடசாலைகளை மூடியுள்ளதாக கூறியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .