Shanmugan Murugavel / 2016 ஜூலை 21 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேஷியாவின் அரச நிதியான 1MDBயிலிருந்து, ஒரு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களுக்கு மேலான தொகையை முடக்குவதற்கு ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
குறித்த நிதிகளானவை, தவறுதலாகக் கையாளப்பட்டுள்ளதாக ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம் குற்றஞ்சாட்டியுள்ளபோதும், மலேஷியப் பிரதமர் நஜீப் ரசாக்கை நேரடியாக பெயரிட்டிருக்கவில்லை. தான் எந்தத் தவறையும் செய்யவில்லை என கடந்த காலங்களில் ரசாக் மறுத்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலேஷியத் தலைநகர் கோலா லம்பூரை நிதி மையமாக மாற்றும் பொருட்டு, 2009ஆம் ஆண்டு 1MDBயை மலேஷியப் பிரதமர் நஜீப் ரசாக் அமைத்திருந்தபோதும், 2015ஆம் ஆண்டு 1MDB, கடன் கட்டணங்களை செலுத்த தவறியிருந்தது.
அரச அதிகாரிகள் உட்பட, பல தனிப்பட்ட நபர்களின் ஆடம்பர வாழ்க்கை முறைகளுக்கு, தவறாக கையாளப்பட்ட நிதிகள் மூலம் நிதி வழங்கப்பட்டதாக ஐக்கிய அமெரிக்க நீதித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நஜீப் ரசாக், எந்தவொரு பணத்தையும் செலவிட்டதாக கூறப்பட்டிருக்காத போதும், அவருக்கு நெருக்கமானவர்கள், ஆபரணங்கள், கலைப் பொருட்கள், ஆடம்பர உடைமைகளை வாங்கவும், சூதாட்டச் செலவுகளை செலுத்தவும், களியாட்டங்களில் இசையமைப்பாளர்களையும் பிரபலங்களையும் அழைப்பதற்கு பில்லியன் கணக்கான டொலர்களை செலவழித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
லொஸ் ஏஞ்செல்ஸில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி , ஐக்கிய அமெரிக்காவிலுள்ள வங்கிக் கணக்குகளினூடாக மேற்கூறப்பட்ட நிதி பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எந்தவொரு சட்டரீதியான விசாரணைக்கும மலேஷியா, முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என நஜீப் ரசாக்கின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago