Shanmugan Murugavel / 2016 டிசெம்பர் 11 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவைத் தொடர்ந்து, அவரது கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படுகின்றன.
இதில், கட்சியின் அடுத்த பொதுச் செயலாளராக, அவரது தோழியான சசிகலா நடராஜனே தெரிவுசெய்யப்படும் சமிக்ஞைகள் காணப்படுகின்றன. பதவியை அவர் ஏற்காமல், கட்சியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் என முன்னர் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால், வெளிப்பட்டுவரும் சமிக்ஞைகளின்படி, அவரே கட்சியின் பொறுப்பை ஏற்பாரெனத் தெரிகிறது. ஜெயலலிதாவுக்கு மலரஞ்சலி செலுத்திய சட்டசபை உறுப்பினர்கள், ஜெயலலிதாவின் கால்களில் விழுந்து வழக்கமாக வணங்குவதைப் போன்று, தற்போது சசிகலாவின் காலிலும் வீழ்ந்து வணங்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அத்தோடு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களோடு, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை சசிகலா மேற்கொண்டு வருகிறார். இதைவிட, பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க கொள்கைபரப்புச் செயலாளர் தம்பிதுரை உள்ளிட்ட ஏராளமான உறுப்பினர்கள், அடுத்ததாக சசிகலாவே பொறுப்பேற்க வேண்டுமென, பகிரங்கமாகத் தெரிவித்துள்ளனர். எனவே, சசிகலாவே பொறுப்பேற்பார் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட அதிர்ச்சியால், 203 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும், தலா 3 இலட்சம் இந்திய ரூபாய்களை வழங்குவதற்கு, அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.
அதேபோன்று, ஜெயலலிதாவின் உடல், எம்.ஜி.ஆர் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகிலேயே புதைக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் நினைவாக, 15 கோடி இந்திய ரூபாய்கள் பெறுமதியில், நினைவிடமொன்றை உருவாக்க, தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பகுதி, "பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவிடம்" என தற்போது அழைக்கப்படும நிலையில், அதை "பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா நினைவிடம்" எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் அவருக்கு முழுவுருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை, மத்திய அரசாங்கத்திடம் முன்வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
54 minute ago
07 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
07 Nov 2025