2026 மார்ச் 26, வியாழக்கிழமை

பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள்: முதலாம் நாளிலேயே பின்வாங்கியது ஐ.இராச்சியம்

Editorial   / 2017 ஜூன் 20 , பி.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளியேறுவதற்கான (பிரெக்சிற்) பேச்சுவார்த்தைகள், நேற்று  ஆரம்பித்த நிலையில், முதலாவது நாளிலேயே, தனது நிலைப்பாட்டிலிருந்து, ஐ.இராச்சியம் பின்வாங்கிக் கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தைகள், பெல்ஜியத்தின் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெறுகின்றன.
இதன்போது, எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேரம்பேசல்களை ஆரம்பிப்பதற்கு முன்னர், “விவாகரத்தை” பூரணப்படுத்துவதற்கு, ஐ.இராச்சியம் ஏற்றுக் கொண்டது.

பிரெக்சிற் செயலாளரான டேவிட் டேவிஸ், தனது நிலைப்பாடான, எதிர்கால வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளும் “விவாகரத்து” பேச்சுவார்த்தைகளும் சமாந்தரமாக நடைபெற வேண்டும் என்பதை, ப்ரஸல்ஸ் சென்று சில மணிநேரங்களிலேயே மாற்ற வேண்டியேற்பட்டது.

கடந்த மாதம் கருத்துத் தெரிவித்திருந்த டேவிஸ், சுதந்திர வர்த்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள், ஆரம்பத்திலேயே இடம்பெற வேண்டுமென்பதுடன், அதில் தோல்வியடைந்தால், ஆரம்பகட்டத்திலேயே பேச்சுவார்த்தை தோல்வியடையும் என்றவாறான கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார்.

இதேவேளை, இன்று கருத்துத் தெரிவித்த ஐ.இராச்சிய நிதியமைச்சர் ஃபிலிப் ஹமொன்ட், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் போது, சடுதியான வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். அத்தோடு, இந்த வெளியேற்றம், சுமூகமான முறையில் நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் தெரேசா மே, இந்த வெளியேற்றம் தொடர்பாகக் கடுமையான நிலைப்பாடுகளை, அடிக்கடி வெளியிடும் போது, அதற்கு மாற்றான, அமைதியான கருத்துகளை வெளியிடுவதை, ஹமொன்ட், தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். அதன் ஓர் அங்கமாகவே, அவர் தற்போதும், சுமூகமான வெளியேற்றம் குறித்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .