2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

சாதிக்கத்துடிக்கும் கராத்தே வீரன்...

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 08 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

எறும்பு ஊர, கற்குழியும் என்பார்கள். சாத்தியமில்லை என்கிற ஒரு விடயத்தைக் கூட, தொடரான முயற்சியின் மூலமாகச் செய்து முடிக்கலாம் என்பதே இந்தப் பழமொழியின் அர்த்தமாகும். இதற்கு எஸ்.எம்.மின்ஹாத் என்கிற மாணவர் மிகச் சிறந்த உதாரணமாவார்.

மின்ஹாத் - அம்பாறை மாவட்டத்தின் மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் அங்குள்ள சம்ஸ் மத்திய கல்லூரியில் பத்தாவது தரத்தில் கல்வி கற்கின்றார்.

கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது, மின்ஹாத் தனது தாயையும் மற்றும் மூத்த சகோதரியொருவரையும் இழந்தார். அப்போது மின்ஹாத்துக்குப் பத்து வயது. இப்போது தந்தையும் இவருடன் இல்லை. மின்ஹாத்தும் அவரின் இரண்டு சகோதரர்களும் இப்போது அவரின் சிறியதாய், சிறியதந்தையரின் பராமரிப்பில் இருந்து வருகின்றார்கள். மின்ஹாத்தின் சிறியதாய் - சிறியதந்தை இருவரும் ஆசிரியர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர்.

அண்மையில் இலங்கை கராத்தே சம்மேளனம் பாடசாலை மாணவர்களிடையே நடத்திய கராத்தே சுற்றுப் போட்டியில், 21 வயது மாணவர்களு;காக பிரிவில் மின்ஹாத் மாகாண மட்டத்தில் இரண்டாமிடத்தினை வெற்றி கொண்டு, தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியிருக்கின்றார்.

சில காலங்களுக்கு முன்னர் மின்ஹாத்தைப் பார்த்த சிலர், இப்போது அவர் பெற்றுள்ள இந்த வெற்றியை நம்புவதற்கு தயங்குகின்றார்கள். காரணம், சுனாமியினால் உடல் - உள ரீதியாக மின்ஹாத் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தார். சாதாரணமாகப் பேசுவதற்கே முடியாத பலவீனமானதொரு நிலையில்தான் மின்ஹாத் இருந்திருக்கின்றார்.

சுனாமியினால் பாதிக்கப்பட்டு இவ்வாறு உடல் - உள ரீதியாக பாதிக்கப்பட்ட மாணவர்களை மீளவும் சாதாரண நிலைக்குக் கொண்டு வருவதற்காக, இலங்கை ஜமாஅதே இஸ்லாமி எனும் அமைப்பு மின்ஹாத் போன்ற மாணவர்களுக்கு கராத்தே பசிற்சிகளை வழங்கும் திட்டமொன்றினை ஆரம்பித்தது.

அந்தவகையில், சுனாமியினால் உடல் - உள ரீதியில் சோர்வடைந்த சுமார் 40 மாணவர்களுக்கு கடந்த சில வருடங்களாக கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. அதில் பத்துக்குட்பட்டவர்களே தற்போதுவரை இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில்தான், மின்ஹாத் தற்போது தேசிய மட்டப் போட்டிக்குத் தெரிவாகியிருக்கின்றார். இவர் கராத்தே பயிற்சியைக் கற்கத் தொடங்கியதிலிருந்து இதுவரை இவருக்கான அனைத்து உதவிகளையும் இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பே செய்து வருகின்றது.

ஆக, மிகவும் ஏழ்மையான சூழ்நிலையில்தான் இந்தச் சாதனையை மின்ஹாத் பெற்றிருக்கின்றார் என்பது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

இதேவேளை, பிரதேச மற்றும் மாவட்ட மட்டங்களில் நடத்தப்பட்ட பல்வேறு கராத்தே போட்டிகளிலும் மின்ஹாத் முதலிடங்களைப் பெற்றிருக்கின்றார்.

இந்த நிலையில், தேசிய மட்டத்தில் வெற்றிபெறுவதே தனது இலக்கு எனக்கூறும் மின்ஹாத்துக்கு ஏழ்மை ஒரு தடையாகவே இருக்கின்றது. இந்தத் துறையில் மின்ஹாத்துக்கு உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மாணவன் தனது இலக்கினை நோக்கி நிச்சயம் முன்னேறுவார் என்பது அனைவரினதும் நம்பிக்கையாகும்.

கல்விக்கும் திறமைகளுக்கும் - ஏழ்மை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது.  தேசிய மட்டத்தில் இடம்பெறவுள்ள கராத்தே போட்டியில் மின்ஹாத் வெற்றிபெறுவதற்கு – அவருக்கான போதிய உதவிகள்; கிடைக்கும் பட்சத்தில் அவரை பின்னொரு நாளில் ஒரு தேசிய வீரராக நாம் சந்திக்க முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .