2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

அக்கரப்பத்தனை பிரதேச சபையால் வழங்கப்பட்ட நியமனத்தில் சர்ச்சை

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் ஆணையாளரின் கட்டளையையும் மீறி, அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளரால் 45 பேருக்கு வழங்கப்பட்ட தொழில் நியமனக் கடிதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், தகவலறியும் சட்டத்தினூடாக தகவலறிவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி 45 பேருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, ஹோல்புரூக்கில், அக்கரப்பதனை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில், செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்றுள்ளது.

அக்கரப்பத்தனை பிரதேச சபையில் நிலவி வந்த தொழில் வெற்றிடத்துக்கு, பிரதேச சபையினூடாக கடந்த காலங்களில் தேர்வுகள் இடம்பெற்றன. எனினும் நேர்கமுகத் தேர்வுகளுக்கு சமுகமளித்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை என்றும் வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கே நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அக்கரப்பதனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில், சிறந்த கல்வித் தகைமை வாய்ந்த இளைஞர், யுவதிகள் தொழில்வாய்ப்பின்றி இருக்கின்ற நிலையில், சபையின் தவிசாளரால் வெளிபிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும், நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, நியமனத்தை வழங்குவதற்கு, பணம் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள 45 பேரின் தகைமைகள் தொடர்பில், தகவலறியும் சட்டத்தினூடாக, தகவலறிந்து கொள்ளவுள்ளதாக, நேர்முகத் தேர்வுக்குச் சென்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மேற்படி நியமனம் வழங்கும் நிகழ்வுக்கு, சபையின் தலைவர், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்டத்தினருக்கு மற்றுமன்றி, அக்கரப்பத்தனை பிரதேசசபை உறுப்பினர்களுக்குக் கூட அறிவிக்கப்படவில்லை எனத் தெரியவருகின்றது.

ஜனாதிபதித் தேர்தலையொட்டி, நாளைய தினம் (23) வரை, எவ்வித அபிவிருத்தி, நியமனங்கள் வழங்க முடியாதெனத் தேர்தல் ஆணையாளராரல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும்கூட, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .