2020 நவம்பர் 24, செவ்வாய்க்கிழமை

‘கட்டளை கொடுத்தவரை அறிவதற்கு காத்திருக்கிறோம்’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 27 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இந்தியாவின் ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

“ரவிராஜின் கொலையில், அரச புலனாய்வுச் சேவைக்கு (எஸ்.ஐ.எஸ்) தொடர்பு இருப்பதைக் காட்டும் சான்றுகளை, குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் சட்டமா அதிபரும் கண்டுபிடித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.  

இந்தக் கொலை வழக்கில், “வழக்குத் தொடுநருக்குத் தெரியாத சிலர் மீது, அரச வழக்குத் தொடுநரினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  

“எனவே, கனிஷ்ட கடற்படை அதிகாரிகள் இதைத் தாமாகச் செய்யவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இவர்கள் யாரோ ஒருவரின் கட்டளையை செயற்படுத்தியவர்கள்.  

“ஆனால், இது புதிரின் ஒரு சிறுபகுதிதான். இது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், கட்டளை கொடுத்தவர் யார் என அறிய, நாம் இன்னும் காத்திருகின்றோம். 

“ரவிராஜின் கொலையில் குற்றம்ஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலையானமை, நாட்டின் நீதித்துறையின் நம்பகம் பற்றிய சந்தேகத்தைப் புதுப்பித்துள்ளது. குறிப்பாக, ஆயுதப்படைகள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் நீதி முறைக்குள் வராத கொலைகளில், இது இன்னொரு பரிமாணத்தைப் பெறுகின்றது.  

“தேசியப் பிரச்சினையில் ரவிராஜ், சிங்களவர்களையும் தமிழர்களையும் கூட்டாகச் செயற்பட வைக்க முயன்றவர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

ரவிராஜ் எம்.பியை கொல்வதற்காக, கருணா பிரிவினருக்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, 50 மில்லியன் ரூபாய் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தார் என, முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கூறினார். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பிலிருந்து விலகிய கருணா அம்மான், மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக இருந்த போது அமைச்சரானார். இருப்பினும், சந்தேகநபர்கள் மீது குற்றம் காணுமளவுக்குச் சாட்சியங்கள் இல்லை என்று ஜூரிகள் தீர்ப்பளித்துள்ளனர். 

இந்தக் கொலை வழக்கு விசாரணைகளில் மாறுபாடுகள் பல இருந்ததாக, சட்டவுரைஞர்கள் கூறினர். இந்த வழக்கில் இரண்டு குற்றங்கள் உள்ளன. ஒன்று, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழும், மற்றையது குற்றவியல் கோவையின் கீழும் ஆனது.  

குற்றஞ்சாட்டப்பட்ட கடற்படை அதிகாரிகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இச்சட்டத்தின் கீழ், பிணையில் விடுதலை செய்ய முடியும். மேலும், பயங்ரவாத தடுப்புச் சட்டத்தில், ஜூரிகளுக்கு இடமில்லை. ஆனால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சாதாரண சட்டத்தின் கீழ், ஜூரிகளினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என்றும் சுமந்திரன் கூறினார்.  

“பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், ஜூரி ஒருவர் தீர்ப்பு வழங்க முடியாது. ஆனால், இங்கு அவ்வாறு நடந்துள்ளது.  

“இந்த வழக்குத் தீர்ப்பு, இலங்கை நீதி முறைமையில் காணப்படும் தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாட்டுடன் வெளிப்பாடு எனச் சிலர் கருதுகின்றனர்” என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--