2021 மே 10, திங்கட்கிழமை

தீர்மானத்தை மீறிய இராணுவத்தினர்

சண்முகம் தவசீலன்   / 2018 மார்ச் 19 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உடையார்கட்டுக் குளம் தொடர்பாக புதுக்குடியிருப்பு அபிவிருத்திக்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள உடையார்கட்டுக் குளத்தில் இருந்து படையினரின் முகாம் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்கு நீர் எடுப்பது சட்டத்துக்கு முரணானதும் மக்களுக்கு குறிப்பாக விவசாயிகள் நன்னீர் மீன்பிடி தொழிலாளிகளுக்கு பாதிப்பானதுமாகும். எனவே இதை உடனடியாக நிறுத்துமாறு கடந்த புதுக்குடியிருப்பு அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இதனை நிறுத்தி உபகரணங்களை அகற்ற இணைத்தலைவர்கள் உத்தரவிட்டனர். இதற்கு இராணுவத்தினர் சம்மதமும் வழங்கியிருந்தனர். இருப்பினும் இன்று (19) வரை அவை அகற்றப்படவில்லை.

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் உள்ள உடையார்கட்டுக் குளத்தில் படையினர் தமது தோட்ட செய்கைகளுக்காக மூன்றுக்கு மேற்பட்ட பாரிய நீர் இறைக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தி குளத்தின் நீரை எடுத்து வருகின்றனர். இதனால் குளத்தின் நீர் மட்டம் மிக வேகமாக குறைவடைவதுடன், இவ்வாண்டு முழுமையான சிறுபோகச் செய்கை மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்படுமென விவசாயிகளால் பல தரப்பினரிடமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த கூட்டத்தின் போது, குளத்தில் இராணுவத்தினர் நீர் எடுப்பதால் விவசாய செய்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே குளத்தில் உள்ள இயந்திரங்களை அகற்றி விவசாயத்தை உரிய முறையில் செய்ய அனுமதிக்குமாறு விவசாயிகளால்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சர், க.சிவநேசன், இந்த குளத்திலிருந்து நீரை நெற்செய்கைக்காக மட்டுமே எடுக்க இம்முறை அனுமதிக்கப்பட்டுள்ளது. வேறு தேவைக்காக நீர் எடுக்க முடியாது. நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள மேற்படி குளத்திலிருந்து இயந்திரங்கள் மூலம் நீரை எடுப்பது சட்டவிரோதமானது. இதனை நிறுத்த வேண்டும். வரட்சி காரணமாக இம்முறை உரிய முறையில் இங்கு நெற்செய்கை இடம்பெறாவிடில் விதை நெல்லுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயி ஒருவர்  இடப்பெயர்வுக்கு பின் ஒரு தடவை மாத்திரமே முழுமையாக நெற்செய்கை மேற்கொண்டதாகவும், இக்குளத்துக்கு வரும் நீரையும் இராணுவத்தினர் மறிப்பதாகவும் நீர்வரத்து குறைந்துள்ளதாகவும் இதனாலேயே தொடர்ச்சியாக இந்த இயந்திரங்களை அகற்றி சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க கோருகிறோம் என தெரிவித்தார்.

இறுதியாக வடமாகாண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன்இந்த தீர்மானம் உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் நீர்ப்பாசன பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், இதுவரை குளத்திலிருந்து இயந்திரங்கள் அகற்றபடாத நிலையில் தொடர்ச்சியாக இராணுவத்தினர் நீரை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X