2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

நல்லிணக்க அரசாங்கம் இனி இல்லை?

Kogilavani   / 2016 டிசெம்பர் 23 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அபிவிருத்தி (விஷேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தைத் திருத்தாவிடின், அச்சட்டமூலத்துக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு கிட்டாதென்று, அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்தார். 

இதேவேளை, “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து கைச்சாத்திட்ட இரண்டு வருடங்களுக்கான ஒப்பந்தம், அடுத்த வருடத்துடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், 2017ஆம் ஆண்டென்பது, சு.கவுக்கும் அக்கட்சியின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் முக்கியமான வருடமாகிறது” என்றும் அவர் கூறினார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின், இவ்வருடத்துக்கான இறுதி ஊடகவியலாளர் சந்திப்பு, கொழும்பில் நேற்று (22) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது, இவ்வாறானதொரு சட்டமூலமொன்று காணப்படாத போதிலும், சுப்பிரி அமைச்சர்கள் காணப்பட்டனர். மீண்டும் அவ்வாறான சுப்பிரி அமைச்சர்கள் உருவாக, ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.   

“அதிகாரப் பகிர்வு இடம்பெற வேண்டுமென்று கூறிக்கொண்டே, அதிகாரத்தைக் கையிலெடுக்கவே முயல்கின்றனர். அதிகாரம் பகிரப்படும் கரண்டியாலேயே, தலையில் அடிக்கும் நடவடிக்கையொன்றே, முன்னெடுக்கப்படவுள்ளது.  

“சு.க.வின் மத்திய செயற்குழுவானது, தொடர்ந்து இரண்டு வருடங்களாக நல்லிணக்க ஆட்சியை நடத்தவே, அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், எஞ்சியுள்ள மூன்று வருடங்களிலும் இந்த நல்லிணக்க ஆட்சியே தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று, கட்சியின் செயலாளர் தெரிவித்திருப்பாராயின், அது அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். எவ்வாறாயினும், நல்லிணக்க அரசாங்கத்தை, தொடர்ந்து கொண்டு நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை, சு.க மத்திய செயற்குழுவே எடுக்கும்” என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--