2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

பாடசாலைக்கு 51,249 பிள்ளைகள் சென்றதே இல்லை

Kogilavani   / 2017 ஜூன் 09 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைக்குச் செல்லவேண்டிய 5-17க்கும் இடைப்பட்ட வயதுகளைச் சேர்ந்தவர்களில் 452,661  பேர், பாடசாலைக்கு செல்வதில்லை. அதில், 51,249 பேர், ஒருநாளேனும் பாடசாலைக்குச் சென்றதே இல்லையென, அரசாங்க தரப்பைச் சேர்ந்த பல பிரிவுகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.   

தொழில் மற்றும் தொழிலுறவுகள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் மற்றும் தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கை அமைச்சு வெளியிட்டுள்ள ‘சிறுவன் செயற்பாட்டு ஆய்வு-2016’ அறிக்கையிலேயே, மேற்கண்ட விவரம் வெளியாகியுள்ளது.   

அந்த ஆய்வு, முழு நாட்டையும் உள்ளடக்கும் வகையில், 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வுக்காக, பிள்ளைகளின் சமூக விஞ்ஞான தகவல், பாடசாலைக் கல்வி, பொருளாதார செயற்பாடு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, பெற்றோரிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல், பல்வேறான தொழில்கள் மற்றும் தொழில் வழங்குவோர்களிடமிருந்து தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.   

இந்த ஆய்வு அறிக்கையின் பிரகாரம், இந்த நாட்டின் மக்கள் தொகையில் நூற்றுக்கு 4.6 சதவீதமான அதாவது 4,571,442 பேர் தொடர்பிலேயே, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இவர்கள், 5-17 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களாவர்.   

அதில், 90.1 சதவீதமானோர் மட்டுமே, அதாவது 4,118,741 பேர் மட்டுமே பாடசாலைக்குச் செல்கின்றனர். 9.9 சதவீதமானோர் பாடசாலைக்குச் செல்வதில்லை. அதாவது 452,661 பேர் செல்வதில்லை. அதில், 1.12 சதவீதமானோர் அதாவது, 51,249 பேர், ஒரு நாளேனும் பாடசாலைக்குச் சென்றதில்லை.   

ஆய்வறிக்கையின் பிரகாரம், லயன் குடியிருப்புகளில் வாழ்வோர், அதனை அண்மித்த பிரதேசங்களில் வாழ்வோர், நாகரிக பிரதேசங்களில், சேரிகளில் வாழ்வோர் மற்றும் யுத்தத்துக்கு முகங்கொடுத்த பிரதேசங்களைச் சேர்ந்த பெற்றோருக்குத் தங்களுடைய பிள்ளைகளுக்கு கல்வியை பெற்றுக்கொடுப்பதற்கான அக்கறை, பொதுவாகவே குறைந்துள்ளது என்றும் அவ்வாய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X