2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

முல்லைத்தீவில் 7 வைத்தியசாலைகளில் 10 வைத்தியர்கள் மாத்திரமே பணி- சிவசக்தி ஆனந்தன் எம்.பி

Suganthini Ratnam   / 2010 ஜூலை 07 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 7 வைத்தியசாலைகளில் 10 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார்.

அவர் தனது உரையில் மேலும் கூறியதாவது:-  

முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும்  மன்னாரின் ஒரு பகுதியிலும் வைத்தியசாலைக்கு செல்கின்ற நோயாளர்களில் 75 முதல் 80 வீதமானவர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளனரென்று வைத்தியசாலையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் சகல வசதிகளுடன் கூடிய சி.ரி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஈ.ஸி.ஜி, எக்ஸ்றே உள்ளிட்ட அனைத்து மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட வேண்டும். முல்லைத்தீவு வைத்தியசாலையில் 200 கட்டில்களைக் கொண்ட ஒரு முழுமையான வார்ட் தொகுதியை உருவாக்க வேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 7 வைத்தியசாலைகளில் 10 வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றுகின்றனர். அவர்களுக்கு சரியான தங்குமிட வசதி இல்லை. மருந்து மற்றும் வைத்திய உபகரணங்களை அரசு, அரசசார்பபற்ற நிறுவனங்கள் வழங்குகின்றபோதிலும், வைத்தியர்கள் பற்றாக்குறையினால் முழுமையான சிகிச்சை அளிக்க முடியாதுள்ளது.

வைத்திய ஆய்வுகூட பரிசோதனையை மேற்கொள்வதற்கு எம்.எல்.ரிக்கள் இல்லை. எக்ஸ்றே கருவி இயக்குபவர்கள் இல்லை. இவர்களை நியமிக்க வேண்டியது உடனடித் தேவையாகும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 மருந்தாளர்கள் தேவைப்படுகின்றனர். தற்போது ஒருவர் கூட இல்லை. 5 முதல் 10ஆண்டுகள் வரை பணியாற்றிய சுகாதாரத் தொண்டர்கள் உள்ளனர். அவர்களுக்கு பணிநியமனம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

வைத்தியசாலையில் மின்வசதி இல்லை. இதனால் சத்திரசிகிச்சை மேற்கொள்வது தொடக்கம், நோயாளர்களைப் பராமரிப்பது வரை அனைத்தும் தடைப்படுகின்றது.

முழுமையான வைத்தியசாலை இல்லாததினால் நோயாளிகள் 80 கிலோ மீற்றர் தூரம் வரை கிரவல் சாலையில் பயணித்து வவுனியா வைத்தியசாலையை  சென்றடைய வேண்டியுள்ளது.

வவுனியா வைத்தியசாலையை எடுத்துக்கொண்டால் மக்கள் தொகைக்கேற்ப வைத்தியசாலை விரிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களிலிருந்தும் மேலதிகச் சிகிச்கைக்காக வருகின்ற நோயாளர்களென அதிகளவான நோயாளர்கள் இவ்வைத்தியசாலைக்கு செல்கின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். சனநெரிசல் மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இது பல்வேறு நோய்த்தொற்றுக்களை ஏற்படுத்தக் கூடும். இதுவரை யுத்தத்தினால் எந்தவித பாதிப்புக்கும் உட்படாத நிலையிலும் இவ்வைத்தியசாலையின் உட்கட்டுமாண தேவைகளைப் பூர்த்திசெய்கின்ற வகையில் போதுமானதாக இல்லை.

நான்கு மாவட்டங்களுக்குமான மைய வைத்தியசாலையாக வவுனியா வைத்தியசாலை  விளங்குவதால், ஒவ்வொரு துறைக்குமான சிறப்பு வைத்தியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்படல் வேண்டும்.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற மாவட்டங்களிலிருந்து வருகின்ற நோயாளர்களும் இங்குள்ள நோயாளர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக தென்பகுதி வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளது. இதன்போது மேற்கொள்கின்ற மேலதிக பயணம் அவர்களது உபாதையை மேலும் அதிகரிப்பதோடு அவர்களைப் பார்ப்பதற்காக வருகின்ற உறவினர்கள் அல்லது அவருடன் இருந்து பராமரிக்க வேண்டிய உறவினர்கள் பெரும் துன்பங்களை அனுபவிப்பதற்கும் வழிவகுக்கின்றது.

வவுனியா வைத்தியசாலைக்கான நீர் விநியோகம் போதுமானதாக இல்லை. இதனைப் போக்குவதற்கு நேரடிக் குழாய் இணைப்பு மூலம் நீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
கழிவு நீர் சுத்திகரிப்பு முறைமை இல்லாமையால் வவுனியா வைத்தியசாலையின் கழிவு நீர் முகாமைத்துவம் மிகவும் மோசமாகவுள்ளது. இது சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு பெரிதும் துணைபுரிகின்றது. இதனை உடனடியாகச் சரிசெய்வது அவசியம்.

இங்கு சிறப்பு வைத்தியர்கள் வந்து சிகிச்சையளிக்கின்றனர். அவர்களுக்கு விடுதி ஒழுங்குகள் சரிவரச் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் இங்கு வருவதற்கு ஆர்வமின்றி இருக்கின்றனர்.

பல ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ள சுகாதாரத் தொண்டர்கள் இருக்கின்றனர். அவர்களைப் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

மன்னார் மாவட்டத்திலும் இதே நிலைதான் நீடிக்கின்றது. அங்கும் மக்கள் நெரிசல் மிகுந்துள்ளது. ஏனைய மாவட்டங்களிலுள்ள பிரச்சினைகள் இங்கும் இருக்கின்றன.

மன்னார் மாவட்டத்திலும் ஏனைய மாவட்டங்களைப் போன்றே மீள்குடியேறிய பகுதிகளில் குறைந்தபட்சம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும். இயங்குகின்ற வைத்தியசாலைகளில் சிற்றூழியர்கள் நியமிக்கப்படல் வேண்டும். பெரியமடு, மரிச்சுக்கட்டி, முள்ளிக்குளம் போன்ற கிராம சுகாதார மையங்களுக்கு வைத்தியர்களை நியமிப்பதுடன் அவர்களுக்கான தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

சுகாதார அடிப்படையில் இப்படிப் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்டுள்ள வன்னி மாவட்டத்திற்கு அதிலும் கடந்த ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு எத்தகைய சுகாதார வளர்ச்சிப் பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளன என்பது குறித்து இச்சபையில் தெரிவிப்பதுடன் நான் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிந்துகொள்ள விரும்புகின்றேன்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--