2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

‘முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஷிவானி

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா விடயத்தில், உண்மைத் தகவல்களைக் கண்டறியும் செயற்பாடுகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்ட அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, இந்த விடயம் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று (19), இடம்பெற்றது. இதன்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வா விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து கருத்துத் தெரிவித்த அவர், 

“நாமல் குமார என்பவர் பொலிஸ் உளவுப்பிரிவைச் சேர்ந்தவர். இவர் பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்குத் தகவல்களை வழங்கியிருக்கிறார். கண்டி சம்பவத்தின் ​போதும், பொலிஸாருக்கு இவர் தகவல்களை வழங்கியிருக்கிறார். இவ்வாறு தகவல்களை வழங்குவதற்காக உளவாளிகளுக்கு பணம் வழங்கப்படுவதுண்டு. கண்டி சம்பவம் தொடர்பான தகவல்களை வழங்கியமைக்கு அவருக்கு இன்னும் பணம் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், பணம் வழங்காத காரணத்தாலும் இவ்வாறான கருத்துகளை அவர் தெரிவித்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

நாட்டின் தலைவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தும், பிரதிப் பொலிஸ் மா அதிபரை இதுவரை கைது செய்யாதது ஏன்? என, ஊடகவியலாளர் ஒருவர் இதன்போது கேள்வி எழுப்பியதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன,

“குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் நபரிடமே முதலில் விசாரணை மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் எந்தத் தலையீடும் இன்றி, சுயாதீன விசாரணையாக முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, விசாரணை நிறைவில் தகுந்த சாட்சியங்கள் காணப்படின் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதை மாத்திரம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க ​முடியாது என குறிப்பிட்ட அமைச்சர், இந்த விடயம் மிக பாரதூரமானதென்றபடியால் உரிய அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போது நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இரு தடவைகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன், நாலக்க சில்வாவுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆயோருக்கு பொலிஸ் மா அதிபர் முழுமையான தகவல்கள் வழங்கியுள்ளாரெனவும், ​அமைச்சர் பதிலளித்தார்.

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                           


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X