2021 மார்ச் 08, திங்கட்கிழமை

வடக்கு, கிழக்கு சட்டத்தரணிகள் வாய் கட்டி எதிர்ப்பு

Editorial   / 2017 ஜூலை 24 , பி.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும், துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள், கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 

கறுப்புத் துணிகளால், தங்களுடைய வாய்களைக் கட்டிக்கொண்ட சட்டத்தரணிகள், சம்பவத்தைக் கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய சுலோகங்களையும் ஏந்திநின்று, எதிர்ப்பைக் காட்டினர். 

இதனால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சகல நீதிமன்றங்களின் செயற்பாடுகளும், நேற்றையதினம் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தன.  

எனினும், டிரயல் அட்பார் முறையில், யாழ்.நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் இரண்டாம் மாடியில் இடம்பெறும், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா, படுகொலை வழக்கு விசாரணை, நேற்றையதினமும் வழமைபோலவே இடம்பெற்றது.  

மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

இந்த வழக்கில், வாதாடுகின்ற சட்டத்தரணிகள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

இதேவேளை, திருகோணமலை சட்டத்தரணிகளும் மட்டக்களப்பு சட்டத்தரணிகளும், பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டதுடன், கண்டன ஆர்ப்பாட்டட்டங்களிலும், ஈடுபட்டனர். 

திருகோணமலை சட்டத்தரணிகள் சங்கத்தாலும் மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வார்ப்பாட்டங்கள், திருகோணமலை நீதிமன்ற வளாகத்துக்கு முன்னாலும் மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்துக்கு முன்னாலும் இடம்பெற்றன.  

“பொலிஸாரின் விசாரணைகள் முடிவடைவற்கு முன்னரே, நீதிபதியை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படவில்லையென, பொலிஸார் திசை திருப்பக் கூடாது. நீதிமன்றத்தின் மீதுமக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதை அச்சுறுத்தும் நோக்கில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில், இலங்கை அரசாங்கம் மற்றும் பொலிஸார் நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும்” என, திருகோணமலையைச் சேர்ந்த சட்டத்தரணியான திருமதி புனிதவதி துஷ்யந்தன் தெரிவித்தார். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர், மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கை, சர்வதேசமே துல்லியமாக அவதானித்துக் கொண்டிருக்கின்ற இந்நிலையில், நீதியை நிலைநாட்டப் பாடுபடும் நீதிபதிக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் செயலாகவே, இதை நாம் கருதுகின்றோம்” என்றார்.  

இதேவேளை, மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கே. நாராயணபிள்ளை தலைமையில், மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு முன்னால் நடைபெற்றது.  

இதில் பலர் கலந்துகொண்டு, “தோட்டாவில் புதையாது தேடிய நீதி”, “சுட்டால் சட்டம் சாகாது”, “நீதித்துறையில் தலையிடாதே” உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.  

மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்களான டி.சி.சின்னையா, வி.வினோபா இந்திரன் உள்ளிட்ட மட்டக்களப்பு நீதிமன்றங்களில் பணிபுரியும் சட்டத்தரணிகள், இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு, கண்டனங்களை வெளிப்படுத்தினர். 

இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள நீதிமன்றங்களில் கொழும்பிலிருந்து வந்து, சட்டத்தரணிகள் ஆஜராக வழக்குகளுக்கு மட்டும் திகதி குறிப்பிடப்பட்டது. ஏனைய வழக்குகள், அழைக்கப்படவே இல்லை.  

(சுப்பிரமணியம் பாஸ்கரன், வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத், எஸ்..பாக்கியநாதன், அஸ்லம் எஸ்.மௌலானா, வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்)   

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .