2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

விடுதலை புலிகளுக்கு எதிரான தடை; வர்த்தமானி மூலம் இந்திய அரசு அறிவிப்பு

Super User   / 2010 மே 24 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தை, சட்டவிரோத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இது தொடர்பான அவசர வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா சார்பில் நாடு முழுவதும் முக்கிய பத்திரிகைகளி்ல் வெளியிடப்பட்டுள்ள அவரச வர்த்தமானி அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், அதன் ஆதரவு அமைப்புகளால் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள் போன்றன தொடர்ந்தும் நடத்தப்படுகின்றன. இதனால், தமிழகத்தில் அமைதி, பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகின்றது. 

இலங்கையில் பெரும்பாலான புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டாலும் எஞ்சியுள்ள போராளிகளும், தலைவர்களும், அவர்களது இலட்சியமான தமிழ் ஈழத்தை உருவாக்கும் நோக்குடனும், இந்திய அரசு மற்றும் இலங்கை அரசை பழிவாங்கும் நோக்குடனும் தமிழகத்தில் ஒன்று சேர்ந்து வருகின்றனர் என்பது சமீபத்தில் பெறப்பட்ட அறிக்கைகள் வாயிலாக தெரியவந்துள்ளது.

எஞ்சியுள்ள போராளிகள் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும், கள்ளத் தோணியில் இந்தியா வந்துள்ளனர். இந்தியாவை, குறிப்பாக தமிழகத்தை தாங்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து திட்டம் வகுக்கும் தளமாக அவர்கள் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதை ஒதுக்கிட விட முடியாது.

கடல்வழியாகவும், முறையான ஆவணங்கள் மூலமாகவும், இலங்கை தமிழ் அகதிகள் என்ற போர்வையில் இந்தியாவுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை புறந்தள்ளிவிடவும் முடியாது.

உலகம் முழுவதும் பரவியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பினர், புலிகளின் தோல்விக்கு இந்தியாவின் பெரும் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளுமே காரணம் என்பது போன்ற, இந்திய விரோதப்போக்கை இலங்கை தமிழர்களிடையே விதைக்கும் வகையில் கட்டுரைகளை இணையதளத்தில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இத்தகைய பிரசாரம், இந்தியாவின் மிக மிக முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை மிகவும் பாதிப்பதாக உள்ளன.

மேற்கண்ட காரணங்களுக்காக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு சட்டவிரோத அமைப்பு என்றும், இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகள் அனைத்தையும் இயன்ற வகையிலெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாய தேவை தொடர்ந்து உள்ளது என்று மத்திய அரசு கருதுகிறது.

தமிழகத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட போராளிகள், அந்த அமைப்பைவிட்டு விலகியவர்கள், அனுதாபிகள் ஆகியோரின் நடவடிக்கைகள், குறித்து விசாரித்ததில் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்ட இந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் எப்படியேனும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவர் என்று தெரியவருகிறது.

புலிகள் மீதான தடை அமுலில் இருந்தும், இந்தியாவில் அவ்வியக்கத்துக்கான ஆதரவு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்களின் நடவடிக்கைகள் காணப்பட்டதாலும், இந்த சக்திகள் அந்த இயக்கத்துக்கு தங்களது ஆதரவை விரிவுபடுத்த முயற்சிகள் மேற்கொண்டன.

இந்த அமைப்பு குறித்த இந்தியாவின் கொள்கை மற்றும் அவர்களுடைய செயல்களை ஒடுக்குவதில் மாநில நிர்வாகத்தின் நடவடிக்கை ஆகியவை குறித்து புலித் தலைவர்கள், இயக்கத்தினர் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புற்றிருக்கிறார்கள் என்றும், மத்திய அரசுக்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மேற்குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பொது அமைதிக்கும், தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், குந்தகம் விளைவிப்பதாகவும் கருதி இவ்வமைப்பு ஒரு சட்டவிரோதமான அமைப்பு என அறிவிக்கப்பட வேண்டுமென்றும் மத்திய அரசு கருதுகிறது.

புலிகள் அமைப்பின் தொடர்ந்த வன்முறை மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிப்பதாக இருப்பதாலும், இவ்வமைப்பு இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், இந்திய மக்களின் பாதுகாப்புக்கு தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாலும், புலிகள் அமைப்பை சட்டவிரோதமான அமைப்பாக உடனடியாக அறிவிப்பது அவசியம் என்றும் மத்திய அரசு கருதுகிறது.

எனவே, தற்போது 1967ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (37/1967) 3ஆம் பிரிவின் (1)உட்பிரிவிலும், (3)உட்பிரிவின் வரம்பு நிபந்தனைகளிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கொண்டு மத்திய அரசு, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறது.


  Comments - 0

  • xlntgson Tuesday, 25 May 2010 09:08 PM

    தமிழ்நாட்டில் ஊடுருவிய புலிகளை கண்டுபிடித்து விடலாம். ஆனால் இந்தியப் புலிகளை என்ன செய்ய முடியும்? அவர்கள் மிக உரத்து குரல் கொடுத்து திரிகின்றனர், வைகோ, சீமானை சொல்லலாம். அவர்கள் வேறு பெயரில் இயங்கும் விடுதலைபுலிகள் என்றே நான் நினைக்கிறேன். வடக்கிலும் கிழக்கிலும் மாநிலசுயாட்சி வலுப்பெற்று பொலீஸ் அதிகாரங்கள் மாநிலசபையிடம் இருந்தால், புலி கருத்து பிரச்சாரம் செய்யவோ மீண்டும் ஒரு புரட்சிக்கு இந்தியாவிலிருந்து தயாராவதற்கோ இயலாமல் செய்யலாம். புலிஆதரவாளர்கள் இந்தியாவில் ஓர்ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--