2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக ஆட்களை கொண்டுவருபவர்களுக்கு 10 வருட சிறை; கனேடிய நாடாளுமன்றில் புதிய சட்டமூலம்

Super User   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 சட்டவிரோதமாக குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கொண்டுவரும் நபர்களுக்கு தண்டனையளிக்கும் வகையிலான சட்டமூலத்தை கனேடிய அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்ற பொதுச்சபையில் சமர்ப்பித்தது.

கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கென்னி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விக் டோவ்ஸ் ஆகியோர் இச்சட்டமூலம் குறித்து வான்கூவரில் செய்தியாளர்களிடம் பேசினர்.

இந்த சட்டமூலத்தின்படி, 50 இற்கு மேற்பட்டவர்களை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவருபவர்களுக்கு குறைந்தபட்சம் 10 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

அத்துடன், சட்டவிரோத குடியேற்றவாசிகளும் ஒருவருட காலம் வரையான சிறைத்தண்டனையை எதிர்நோக்கலாம். அவர்களுக்கு சுகாதார நலன்புரி சேவைகள் குறைக்கப்படுவதுடன் நிரந்தர வதிவுரிமையும் நிராகரிக்கப்படலாம். அவர்களின் அகதி விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் 5 வருடகாலம் வரை நிரந்தரவதிவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 490 இலங்கையர்கள் எம்.வி. சன் ஸீ கப்பல் மூலம் கனடாவை சென்றடைந்தபின் சட்டவிரோத குடியேறிகளைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் பாதுகாப்பு விவகார அமைச்சர் விக் டோவ்ஸ் இந்த உத்தேச சட்டம் குறித்து கூறுகையில், 'கனடா ஒரு வரவேற்கும் நாடு. ஆனால் எமது முறைகளை துஷ்பிரயோகம் செய்வதை நாம் சகித்துக்கொள்ள மாட்டோம். எமது இந்நடவடிக்கை மனிதக் கடத்தல்களை நாம் சகித்துக்கொள்ள மாட்டோம் என்ற செய்தியை கூறுகிறது. எமது பிரஜைகளினதும் அகதிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கம்' எனக் கூறியுள்ளார்.

ஆனால் இச்சட்டமூலத்தை குறைகூறுவோர் இதன் மூலம் அகதிகள் குற்றவாளிகளைப் போன்று நடத்தப்படுவர். அத்துடன் இந்த உத்தேச சட்டம் கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கத்திற்கு அளவுக்கதிமான அதிகாரங்களை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

கனேடிய தமிழ்க் காங்கிரஸ் பிரமுகர் டேவிட் பூபாலப்பிள்ளை கருத்துத் தெரிவிக்கையில் இப்புதிய விதிகள் நியாயமான அகதி அந்தஸ்து கோருபவர்களின் எந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து தாம் கவலையடைவதாக தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .