2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டு வேலைவாய்ப்பை தக்கவைக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐ.தே.க

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 12 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.சுகந்தினி)

சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ள பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் உடனடியாக ஆக்கபூர்வமானதொரு  நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஐ.தே.க வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் தேசிய வருமானத்தில் பெரும்பங்களிப்பு செலுத்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை இழப்பதன் மூலம் நாடு பெரும் பாதிப்பை எதிர்நோக்கும் என்பதை அரசாங்கம் கவனத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என்று ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் சுட்டிக்காட்டினார்.

இலங்கையர்களுக்கு சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாக இலங்கையின் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலைய கழகத்திற்கும் (அல்பியா) சவூதி அரேபியாவின் தேசிய ஆட்சேர்ப்புக் குழுவுக்கும் இடையில் பொது இணக்கப்பாடொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த இணக்கப்பாட்டின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் முறையாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரமே இலங்கையர்களுக்கு சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு தடை விதிப்பதான யோசனைக்கு மேற்படி ஆட்சேர்ப்புக் குழு வந்துள்ளது.

இந்த நிலைமை இலங்கைக்கு பாரியதொரு ஆபத்தை விளைவிக்கும். காரணம் தேயிலை, இறப்பர், தென்னை போன்ற முப்பெரும் ஏற்றுமதிப் பொருட்கள் மூலமே இலங்கையின் தேசிய வருமானம் அதிகரிக்கப்பட்டு வந்ததான காலம் மாறி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலமே கூடியளவு இலாபம் கிடைக்கின்றது என்ற நிலைமை தற்போது உருவாகியுள்ளது.

ஆனால், அந்த நிலைமைக்கு தற்போது பங்கம் ஏற்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்ற 500,000 பணியாளர்கள் தற்போது சவூதி அரேபியாவில் பணியாற்றுகிறார்கள். அத்துடன், ஆண்டொன்றுக்கு இலங்கையிலிருந்து 50, 000 பேர் வேலைவாய்ப்புத் பெற்று சவூதி அரேபியாவுக்கு செல்கின்றனர். இதனால் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மூலம் இலங்கைக்கு பெரும் இலாபம் கிடைக்கிறது.  

மேலும் சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்பு பெற்று செல்பவர்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும் அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .