2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

தெற்கில் சொத்துக்களை இழந்த தமிழ் மக்கள் தொடர்பிலும் அரசு அக்கறை செலுத்தும் - அமைச்சர் டக்ளஸ்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற வந்திருக்கும் சிங்கள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் மட்டுமல்ல தெற்கிலிருந்து கலவரங்களின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு சிங்கள மக்கள் சிலர் சென்றிருக்கிறார்கள். இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் சந்தித்து உரையாடியிருந்தார். மீளக்குடியமர்த்தக் கோரும் சிங்கள மக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கபோகிறீர்கள் என்று கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து கூறுகையில்...

'நான் அவர்களுடைய மீள் குடியேற்றத்திற்கு தடங்கலாக இருப்பதாக சிலர் கூறிவருகிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மீள்குடியேற வருகை தந்திருக்கும் மக்களை நான் நேரில் சந்தித்து உரையாடினேன். மீள்குடியேற வந்திருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு குடியிருந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய அடையாள அட்டையில் பிறப்பிடம் யாழ்ப்பாணம் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகையினால் அவர்களை மீள்குடியமர்த்துவது தொடர்பாக மீள் பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தேன்.

ஆரம்பத்தில் ஏற்பட்ட கலவரங்களினாலும் யுத்த சூழ்நிலையாலும் வடக்கிலிருந்து சிங்கள மக்கள் தெற்கிற்கு இடம்பெயர்ந்திருந்தனர். அதேபோல் கொழும்பிலிருந்தும் பல தமிழர்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இன்றைய சூழ்நிலையில் யாரும் எந்த இடத்திலும் குடியமரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாங்கள் ஏற்கனவே குடியிருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுடைய மீள்குடியேற்றம் தொடர்பில் அரசு நிச்சயமாக பரிசீலிக்கும்...' என்று குறிப்பிட்டார்.

'வடக்கிலுள்ள மக்கள் மீள்குடியமர்வதற்கே இன்னமும் இடங்கள் சரியாக ஒதுக்கப்படவில்லை. இந்நிலையில் தெற்கிலிருந்து வந்திருப்பவர்களை உடனடியாக குடியமர்த்துவதென்பது உடனடி சாத்தியமற்ற விடயமாகவே இருக்கிறது. இருந்தபோதிலும் இவ்விடயம் தொடர்பாக அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். ஒருசாராருக்கு மட்டுமல்லாமல் தெற்கில் தமது சொத்துக்களை இழந்த தமிழ் மக்கள் தொடர்பிலும் நாங்கள் அக்கறை செலுத்துவோம். ஆகவே இவ்விடயத்தை யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். உண்மையாக பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அரசு கண்டிப்பாக அவர்களுக்கு உதவும் என்பதை மனதிற்கொள்ள வேண்டும்...' எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்மிரருக்கு மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .