2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கடத்தல்,காணாமல்போனோர் விவகாரத்தில் அரசு மீது மக்கள் சந்தேகம்:சிவாஜிலிங்கம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 10 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான முறையான நடவடிக்கையொன்று அரசாங்கத்தால் இதுவரையில் முன்னெடுக்கப்படாதால் அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர்  நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
 
இந்நிலையில், கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான துரித நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென்று சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

காணாமல்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி  வலியுறுத்தும் ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் விபரங்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்.   இதன் மூலம் கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் அறிந்துகொள்ளமுடியும்.  

கடத்தப்பட்டும் காணாமல்போனவர்களைத் தேடி  அவர்களின் பெற்றோர்கள், மனைவிமார்கள், பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் தினமும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.  அவர்களின் கவலைக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

சிறையிலுள்ள அரசியல் கைதிகள் மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ள போர்க்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும்.  நமது நாட்டில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான மனித உரிமை மீறல்களுக்கு முடிவு கட்டப்படவேண்டும்' என்றார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி காணாமல்போனோரை தேடியறியும் குழு ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில்  ஐ.தே.கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர்; நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், கடத்தப்பட்டும் காணாமல்போனவர்களின் உறவினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .