2025 டிசெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அரசாங்கம் தேசிய வீரர்களுக்கு துரோகம் இழைக்கிறது - கலாநிதி குமரகுருபரன்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அரசாங்கம் தேசிய கீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்க முயற்சிப்பது கடும் அதிர்ச்சியைத் தருகிறது. பல தசாப்தங்களாக நிலவிய போரை முடிவுக்குக்கொண்ட வந்த பின்னர் மீளிணக்கப்பாடு மற்றும் மீள்கட்டுமானத்தில் ஈடுபடவேண்டிய இக்காலகட்டத்தில் தேசியகீதத்தின் தமிழ்ப்பதிப்பை நீக்கியமையானது அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

அத்துடன், இலங்கைப் பிரஜைகளுக்கும் தேசிய வீரர்களான சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருணாசலம் போன்றோரை அவமதிப்பதாகவும் அமைகிறது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மாகாணசபை உறுப்பினருமான கலாநிதி குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- "இலங்கையில் வெசாக் தினத்தை விடுமுறையாகப் பிரகடனப்படுத்துவதில் முன்னிலையாக நின்று செயற்பட்டவர் சேர்.பொன்னம்பலம் இராமநாதன் என்பதை இந்த அரசாங்கம் மறந்துவிடக்கூடாது.
 
இனங்களுக்கிடையேயான இணக்கப்பாட்டுக்கும் சகோதரத்துவத்திற்கும் என உழைத்த அந்த மாமேதைகளை அவமதிப்பதாகவே அமைச்சரவையின் இச்செயற்பாடு அமையும். தமிழருக்கெதிரான நடவடிக்கைகள் இலங்கைப் பிரஜைகளுக்கெதிரான நடவடிக்கையே. அதனை அரசாங்கம் செய்வது வருத்தமளிக்கிறது.

இது போன்ற அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக கண்டிப்பதோடு இது போன்ற இனவாத செயற்பாடுகளுக்கெதிராக சகல இலங்கைப் பிரஜைகளும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

இச்சந்தர்ப்பத்தில் கனடா, சுவிஸ்சர்லாற்து, தென்னாபிரிக்கா போன்ற பரந்தளவில் பல்லினங்கள் வாழும் தேசங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் தேசிய கீதத்தினைக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இது போன்ற இலங்கையின் ஒற்றுமையையும் புரிந்துணர்வையையும் சீரழிக்கும் எந்தச்செயற்பாட்டையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்' என்று அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X