2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

புதிய ஆட்சியின் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தயார்: ரணில்

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 15 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் பேராசை பிடித்த அரசாங்கம். இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமாயின் மாகாணசபை, பொதுத்தேர்தல், ஜனாதிபதி தேர்தல் என உடைத்து  தேர்தல் நடத்த முடியாது. இந்த ஆட்சியை மாற்றுமளவிற்கு பொதுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். புதிய ஆட்சியைப் பெற்று கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நான் தயாராக இருக்கின்றேன்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு ஏற்பாடு செய்த உண்ணாவிரத போராட்டம் இன்று யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'பலாலி விமானத் தளத்தினை அடிப்படையாக வைத்து மக்களின் நிலங்களை அபகரிக்க முடியாது. காணிகளை வழங்குவதை வைத்துக்கொண்டு பலாலி விமானத்தினை பலவீனப்படுத்த முடியாது. நான் அரசாங்கத்தில் அங்கம் வகித்த பொழுது இந்நிலங்களை எடுக்க சொல்லியிருந்தேன். அப்பொழுது பலாலியின் பாதுகாப்பிற்காக அந்த காணிகள் எடுக்கப்பட்டன.

ஜனாதிபதியாக பிரேமதாச இருந்த காலத்தில் அந்நிலங்களை ஒப்படைக்க சொல்லியிருந்தார். நான் 2003, 2004ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமராக இருந்த காலத்தில் அவ்வாறு சொல்லப்பட்டிருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்துவிட்டது. அதனால் இந்த நிலங்கள் மக்களிடம் மீண்டும் வழங்கப்பட வேண்டும்' என்று அவர் கூறினார்.

'பலாலி விமானத் தளத்தினை பாதுகாப்பதுடன், மக்களின் காணிகளையும் வழங்க வேண்டும். அதை செய்ய முடியும். அதனடிப்படையில் பாதுகாப்பு படையுடனும் மக்களுடனும் நான் பேசி இருக்கின்றேன். அந்த அடிப்படையில் எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து பலாலி விமானத்தளத்தினை பாதுகாப்பதும், காணி உரிமையாளர்களிடம் காணிகளை வழங்குவதும் ஆகிய இரு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க விரும்புவதாகவும்' அவர் கூறினார்.

'அத்துடன், நீதிமன்ற தீர்ப்பின்படி 28,000 குடும்பங்களுக்கு காணி வழங்கபப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. உண்மையில் நான் நினைக்கின்றேன் அதைவிட அதிகமான மக்கள் இருக்கின்றார்கள் என்று யாழில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் போன்று கொழும்பு மாவட்டத்திலும் நில அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன' என்றும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார்.

'காணிகள் மீது ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு பேராசை இருக்கின்றது. மக்களின் காணிகளை அபகரித்து விவசாயம் மேற்கொண்டு அந்த பொருட்களை இங்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கின்றார்கள். ராஜபக்ஷ அரசாங்கம் பேராசை பிடித்த அரசாங்கம். ராஜபக்ஷ அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

அந்த அரசை வீட்டிற்கு அனுப்ப கொழும்பு மற்றும் யாழ். மக்கள் ஒன்றினைந்து போராட வேண்டும். போராட்டத்தினை முன்னெடுத்து கொண்டு அடுத்த வருடம் ராஜபக்ஷ அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி யாழ் மற்றும் கொழும்பு மக்களை ஒன்றிணைந்து படை திரள வேண்டுமென்றும், அதற்கான ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென்றும்' ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--